தம்பி மகேஷின் வீடு.
ஹாலில் சோகமாக நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான் மகேஷ்.
பக்கத்து நாற்காலியில் அண்ணன் சிவராமன் அமர்ந்திருக்க, எதிர் ஷோபாவில் அம்மா பூங்கோதை அமர்ந்திருந்தார்.
சற்று முன் தான் மகேஷின் வீட்டுக்கு அவனது அண்ணன் சிவராமன் வந்திருந்தான். அம்மா மகேஷின் வீட்டில் தான் இருக்கிறார்.
சிவராமன் ஆரம்பித்தான்.
” எனக்கு கல்யாணமாகி எட்டு வருஷமாச்சு.ஒரு நாளாவது என்கிட்ட கோவிச்சுட்டு என் பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு போயிருப்பாளா..? இல்ல போகத்தான் நான் விட்டுருவேனா…அந்தளவுக்கு
அவளை கண்டிச்சு அடக்கி என் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்கேன். மகேஷ்க்கு சாமர்த்தியம் பத்தலைம்மா. பொண்டாட்டிக்கு ரொம்ப செல்லம் குடுக்கிறான். அதான் கௌரி தலை கால் புரியாம நடந்துக்கறா…
புருஷன்னா ஒரு ‘ கெத்து’ வேணும். அப்பப்ப அவளை என்னை மாதிரி மிரட்டி வச்சிருக்கனும். தலைல தூக்கி வச்சு கொண்டாடக்கூடாது!”
இதைக் கேட்ட மகேஷ் உஸ்னமானான்.
” என்னன்னா பேசறீங்க. கல்யாணமாகி ஆறு வருஷமா ஆச்சு? ஆறு மாசம் தானே ஆவுது. புதுப்பொண்டாட்டியாச்சேனு அதட்டாம ரொம்ப பாசமா, நியாயமா நடந்துகிட்டேன். அது தப்பா?
நேத்து அவகிட்ட , ‘அம்மாவே காலைல நேரத்துல எந்திரிச்சு வாசல் தெளிச்சு கோலம் போடறாங்க. சமையல் பண்றாங்க. துணி தோய்க்கிறாங்க. நீ என்ன சீக்கு வந்த கோழி மாதிரி எப்பப்பார்த்தாலும் படுத்துட்டே இருக்கிற… இந்த வீட்டுக்கு மருமகளா வாழ வந்தியா இல்ல மகாராணி மாதிரி அதிகாரம் பண்ண வந்தியா’னு கொஞ்சம் உறைக்கிற மாதிரி கேட்டுட்டேன்.
இதுக்கு போயி ‘ என்னை சீக்கு வந்த கோழினு சொல்றீங்களா’ னு கேட்டுட்டு உடனே பொட்டியைத் தூக்கிட்டு போய்ட்டா! தப்பெல்லாம் அவங்கம்மா அப்பா மேல தான்”
அதற்கு சிவராமன்,” கௌரி உன் கூட கோச்சிட்டு போனதுக்கு அவங்கம்மா அப்பா எப்படிடா பொறுப்பாவாங்க?” என்று கேட்டான்.
” அவளை ரொம்ப செல்லம்மா வளர்த்துட்டாங்க. புருஷன் வீட்ல எப்படி நடந்துக்கனும்னு முன்னாலயே அவளுக்கு சொல்லிக் கொடுக்கல. கோவிச்சுட்டு போனவளுக்கு நல்ல புத்திமதி சொல்லி அனுப்பியும் வைக்கிறதில்ல.”
” அவளை அடக்கி வைக்க உனக்கு சாமர்த்தியம் பத்தலனு சொல்லு. கல்யாணமான இந்த ஆறு மாசத்துல மூனாவது தடவையா கோவிச்சிட்டு போயிருக்கா. இது டூ மச்! சரிம்மா, நீங்க என்னம்மா சொல்றீங்க?”
சிவராமன் இப்போது தன் தாயைப்பார்த்து கேட்டான்.
” என்னத்த சொல்றது சிவா…வா..நானும் நீயும் வழக்கமா போன மாதிரி இந்த தடவையும் மகேஷோட மாமனார் வீட்டுக்கு போயி கௌரியை சமாதானப்படுத்தி அழைச்சிட்டு வரலாம்….என்ன மகேசு…நாங்க போய் கூட்டிட்டு வரோம். நீ கவலைப்படாத… எந்திரிச்சுப்போய் முகத்தை கழுவு. ஷேவிங் பண்ணிட்டு டிவி கீவி போட்டுப்பாரு.”
பஸ்டேன்ட்.
சிவராமனும் அம்மாவும் புறப்படத்தயாராக இருந்த தாம்பரம் பஸ்ஸில் ஏறப்போனார்கள்.
அப்போது.
” சிவராமன் ஸார்!” என்ற குரல் ஒலித்தது.
திரும்பிப்பார்த்தான் சிவராமன்.
தன் தெருவில் குடியிருக்கும் மூர்த்தி அவனை நோக்கி வந்து நின்றார்.
” என்ன ஸார்?”
” உங்களுக்கு விசயம் தெரியுமா?”
” என்ன விசயம்”
” உங்க மனைவி… நாம இருக்கிற தெருவுக்கு அடுத்த தெருவுல இருக்கிற ஒரு எலக்ட்ரீசியன் கூட ஓடிப்போயி்ட்டதா நம்ம தெருவுல எல்லாரும் பேசிக்கிறாங்க ஸார்..!”
” என்னது..?!”
சற்று முன் தன் மனைவியை
‘ கண்டித்து’ வைத்திருப்பதைப் பற்றி பெருமையாக பேசியது சிவராமனுக்கு நினைவுக்கு வந்தது.
தன் அம்மாவின் முகத்தை நேராக பார்க்க திராணியின்றி தத்தளித்தான் சிவராமன்.