செய்திகள்

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

சென்னை, பிப்.11-

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை, ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது.

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். பருவமழை பொய்த்து போனதால் ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீரை கொண்டு ஒரு சில தினங்கள்தான் குடிநீர் வினியோகிக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு 7–ந் தேதி காலை கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டது.

முதலில் வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்பின்பு கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கண்டலேறு –பூண்டி இடையேயான தூரம் 177 கிலோ மீட்டராகும். நேற்று மாலை 4½ மணிக்கு தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஹென்றிஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சுப்புராஜ், உதவி பொறியாளர்கள் சண்முகம், சதீஷ்குமார், பழனிகுமார், பிரதீஷ் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். இந்த தண்ணீர் இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரியை இன்று சென்றடைய வாய்ப்பு உள்ளது.

மேலும், ஆந்திர மாநில விவசாயிகளுக்கான நீரின் தேவை படிப்படியாக குறையும்போது, அதிக அளவிலான கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்து, சென்னையின் குடிநீர் தேவையை கணிசமாக பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது என தமிழக பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *