பீஜிங், செப். 26–
சீன ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை பசிபிக் பெருங்கடலில் நடத்தியதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளது.
இது குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணிக்கப்பட்ட கடல் பகுதியில் ஏவுகணை சரியாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள், செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சி திறன்களை ஆய்வு செய்ய நடத்தப்பட்ட இந்த சோதனை, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன் கூட்டியே தகவல்
சர்வதேச சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட சோதனை குறித்து, சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீன ராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், எந்த நாட்டிற்கும் எதிராக இந்த சோதனை நடத்தப்படவில்லை என்றும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்த ஏவுகணை அமெரிக்காவின் எல்லையை அடையும் திறன் கொண்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையை சீனா கடைபிடிக்கிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக ஏவுகணை சோதனைகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவின் ஏவுகணை சோதனை இன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், கிழக்கு கடல் பகுதியை நோக்கி வடகொரியா பல குறுகிய தூர ஏவுகணை சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.