அறைகள் சொல்லும் கதைகள் 20
அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த எட்டாவது மாடியில் ஐந்தாவது பிளாக்கில் நடந்த கொலையைத் துப்புத் துலக்குவதற்காக காவல்துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி வளைத்திருந்தார்கள். குடியிருப்பில் இருந்தவர்களைத் தவிர வேறு யாரும் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைவதற்குக் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. ஏறத்தாழ ஐநூறு வீடுகள் இருக்கும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு பேசும் அத்தனை மாநிலத்து மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் எட்டாவது மாடியில் ஐந்தாவது பிளாக்கில் உள்ள அனுஷாவின் இறப்பு மட்டும் மர்மமாகவே இருந்தது. அவள் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள். அந்தக் கட்டிடத்தில் சொந்தமாக வீட்டை விலைக்கு வாங்கி அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்தாள். அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. உறவுகள் எல்லாம் வெளியூரில் இருக்க அனுஷா மட்டும் சென்னையில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தாள். காலையில் அலுவலகம் செல்பவள் இரவு தான் திரும்பி வருவாள். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களுடன் அவளுக்கு அவ்வளவாக நட்பு இருந்தது இல்லை . அவள் உண்டு , அவள் அலுவலகம் உண்டு . அவளின் வீடு உண்டு என்று இருப்பாளே தவிர யாருடனும் பேச்சுவார்த்தை வைப்பதில்லை. அப்படி இருந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா ? என்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் எல்லாம் பேசிக் கொண்டார்கள். எல்லா தளங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
யார் எங்கே இருக்கிறார்கள்? எந்த வீட்டிற்குள் யார் நுழைகிறார்கள் என்பதைக் கூடத் துல்லியமாக கணிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் உதவின.அந்தக் கேமராக்களை எல்லாம் கண்காணிப்பதற்கு ஒரு கண்காணிப்பு அறை இருந்தது. அத்தனை பிளாக்குகளிலும் உள்ள கேமராக்கள் அத்தனையும் கண்காணிப்பு அறையில் பதிவாகி கொண்டிருக்கும் . அனுஷாவின் கொலையைத் துப்பு துலக்குவதற்குக் கூட காவல்துறையினர் கண்காணிப்பு அறையில் தான் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன . சிப்ட் கணக்கில் வாட்ச்மேன்களும் வந்து செல்கிறார்கள். அதைவிட கேமராக்கள் அத்தனையும் படம்பிடித்து வைத்திருக்கின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்த காவல்துறையினர் அனுஷாவின் மரணத்தை மட்டும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் எப்படி இறந்தாள்? யாரேனும் இவளைக் கொலை செய்தார்களா? இல்லை இது தற்கொலையா? என்ன என்பதே காவல்துறையினருக்கு விளங்காமல் இருந்தது. கண்காணிப்பு அறையில் இருந்த பதிவு செய்யப்பட்ட அத்தனை பதிவு செய்யப்பட்ட அத்தனை வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் ஒரு முடிவை எட்டவே முடியவில்லை.
காவல்துறை உயர் அதிகாரி வெள்ளைச்சாமி மிக நுணுக்கமாக ஒவ்வொரு பிரேமாக நகர்த்தி நகர்த்தி பார்த்துக் கொண்டே இருந்தார். இரண்டு வாசல்களை காவல் காப்பதற்கு வாட்ச்மேன்கள் இருந்தாலும் கண்காணிப்பு அறையில் உள்ள கேமராக்களை பார்ப்பதற்கு மட்டுமே அமர்த்தப்பட்டவன் தான் சோலையப்பன். வயது அறுபதைத் தாண்டிய முதியவர். ஆனால் உடம்பில் முறுக்கு இன்னும் குறையாமல் இருந்தது. கண்காணிப்பு அறையில் இருந்த வீடியோக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி சோலையப்பன் அருகில் வந்தார்.
“சோலையப்பா இந்த அப்பார்ட்மெண்ட்ல எத்தன கேமராக்கள் இருக்கு? என்று இயல்பாகவே கேட்டார்.
” எறநூறு கேமராக்கள் இருக்கும் சார் என்றார் சோலையப்பன்.
“எல்லா கேமராவும் சரியா வேலை செய்யுதா? இருபத்து நாலு மணி நேரமும் பதிவு செய்ற கேமராவத் தானே நீங்க வச்சிருக்கீங்க?”
என்று வெள்ளைச்சாமி கேட்டதற்கு
” சார் எல்லா கேமராவும் சரியா வேலை செய்யும். அடிக்கடி நாங்க அத செக் பண்ணுவோம். இதுவரைக்கும் எந்த கேமராவுக்கும் பழுது வந்ததில்ல. நீங்க முழுசா செக் பண்ணலாம்” என்று சொன்னார் சோலையப்பன்
” ம் ” என்று தலையாட்டிய வெள்ளைச்சாமி, ஒவ்வொரு பிளாட்டாக படிகளில் நடந்து சென்று ஒவ்வொரு பிளாட்டாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அத்தனை கேமராக்களும் சரியாகத் தான் இருந்தன. அவர் கம்பீரமாக நடந்து வரும் பூட்ஸ் சத்தத்தை கேட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பவர்களுக்கு கொஞ்சம் நடுக்கம் கலந்த பயம் ஏற்பட்டது.
” ஏதோ நம்மள குற்றவாளின்னு சொல்லிடுவாங்களோ? என்ற அச்சம் அவர்களுக்கு உறைந்து நிற்க, யாரையும் விசாரிக்காமலே எட்டாவது மாடிக்கு மட்டுமே ஏறினார் வெள்ளைச்சாமி. வளைந்து வளைந்து போகும் அந்தப் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் சென்ற வெள்ளைச்சாமி ஏழாவது மாடி சென்றதும் சட்டென திரும்பி பார்த்தார். ஒரு வீட்டில் திறக்கப்பட்டிருந்த கதவு வெள்ளைச்சாமியைப் பார்த்ததும் பட்டென அடைக்கப்பட்டது. சிறிது சந்தேகத்துடன் படிகளில் கீழே இறங்கிய வெள்ளைச்சாமி, டக்கென மூடிய வீட்டின் கதவைத் தட்டினார். எத்தனையோ முறை தட்டியும் திறக்கப்படாத அந்தக் கதவை மறுபடியும் மறுபடியும் தட்டிக் கொண்டே இருந்தார் வெள்ளைச்சாமி.
” சார் , எதுக்காக கதவ தட்டிக்கிட்டே இருக்கீங்க .அதுதான் கதவு அடைச்சுட்டோம்ல பெறகு எதுக்கு எங்களை தொந்தரவு பண்றீங்க? அந்த பொண்ணோட இறப்புக்கும் எங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல எங்கள ஏதும் கேட்காதீங்க ? என்று வெள்ளைச்சாமி கேட்காமலே படபடவென பதில் சொன்னான் அந்த வீட்டிலிருந்த ராமராஜ்.
“நான் உங்கள எதுவுமே கேட்கலையே? நீங்களே எல்லாத்தையும் சொல்றீங்க.உங்க மேல சந்தேகமா இருக்கு. நான் உங்கள விசாரிக்கணும் “என்று வெள்ளைச்சாமி சொல்ல
“சார், நான் கிரிமினல் லாயர். என்கிட்டயேவா என்னையெல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது. நீங்க என்ன வேலைக்கு வந்தீங்களோ அந்த வேலையப் பாத்துட்டு போங்க”
என்று கொஞ்சம் விறைப்பாகப் பேசிவிட்டு கதவை மூடினான் ராமராஜ் .கிரிமினல் லாயர் என்று ராமராஜ் சொன்னதைக் கேட்ட வெள்ளைச்சாமி அவரிடம் எதுவும் பேசாமல் எட்டாவது மாடிக்கு ஏறினார் .
ஐந்தாவது பிளாட்டில் அனுஷா குடியிருந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தார் .அவளின் படுக்கையறை, குளியல் அறை, தனியறை ,கழிவறை என்று அத்தனை அறைகளையும் சுற்றி பார்த்து எந்த முடிவுக்கும் வராமல் அங்கே இருந்த சோபாவில் அமைதியாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்தார். எதிரிலிருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் சிரித்தபடியே இருந்தாள் அனுஷா. இவ்வளவு அழகான பொண்ணு ஏன் சாகணும் ?இந்த பொண்ணுக்கு வேறு ஏதும் பிரச்சனை இருக்கா? எப்படி அவளால சாக முடிந்தது?” என்று எத்தனையோ சிந்தனைகளை ஓடவிட்டு அங்கு அமர்ந்திருந்தார் வெள்ளைச்சாமி . வீட்டை விட்டு வெளியேறியவர் அங்கிருக்கும் சுவர்களைப் பார்த்தார் . அங்கேயும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
சரி நிச்சயமாக அனுஷா தற்கொலை தான் செய்து கொண்டிருக்க வேண்டும். ஒன்று காதல் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகி அதனால் ஏற்பட்ட அவமானத்தால் அவள் இறந்திருக்கலாம். இல்லை முன் விரோதம் காரணமாக அவள் கொல்லப்பட்டிருக்கலாம் . இல்லை அவள் மரணம் தற்கொலையா? என்று எந்த முடிவுக்கும் வராத வெள்ளைச்சாமி, மறுபடியும் படிகளில் கீழே இறங்கினார். அப்போது பட்டென எட்டாவது மாடியில் இருந்த கேமராக்கள் இரண்டு கீழே விழுந்தன. அதை சற்றும் எதிர்பார்க்காத வெள்ளைச்சாமி, விழுந்த கேமராக்களைக் கையில் எடுத்துப் பார்த்தார் .அது படம் பிடிக்காத டூப்ளிகேட் கேமராக்கள் என்பதை அதை ஆராய்ந்த பிறகு கண்டு கொண்டார். அவருக்குள் ஆச்சரியம் மேலிட அந்தக் கேமராக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார் . அதில் எதுவும் பதிவாகவில்லை என்பது தெரிய வந்தது. நேரே கண்காணிப்பு அறைக்கு வந்தார் வெள்ளைச்சாமி.
எட்டாவது மாடியில் இருக்கும் கேமராக்களைச் சோதனை செய்ய வேண்டும் என்று சோலையப்பனிடம் கேட்டபோது,
“இது தான் சார், எட்டாவது மாடி கேமராக்கள் என்று, பதிவு செய்யப்பட்ட வீடியோக்களைக் காட்டினார் சோலையப்பன். அது எட்டாவது மாடி அல்ல ஏழாவது மாடி என்பதை அறிந்து கொண்டார் வெள்ளைச்சாமி.
” உண்மையைச் சொல்லு. என்ன நடந்தது?ஏன் எட்டாவது மாடியில இருக்கிற கேமரா வேலை செய்யல?” சொல்லு என்று வெள்ளைச்சாமி கேட்க
” எனக்குத் தெரியாது” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் சோலையப்பன்
” என்ன நடந்தது ? எப்படி அனுசா செத்தா சொல்லு” என்று சோலையப்பனை வெள்ளைச்சாமி எகிற,
” எனக்குத் தெரியாது” என்று மறுபடியும் பதில் சொன்னார் சோலையப்பன். அப்படி சொன்னபோது, அவர் முகம் முழுவதும் வேர்த்திருந்தது.
” உண்மையைச் சொல்லு அனுசாவை என்ன பண்ணுன?” என்று கேட்டபோது. பதில் சொல்லாமல் திணறினார், சோலையப்பன். தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து சோலையப்பன் நெற்றியில் வைத்து
“உண்மையைச் சொல்லு “என்று வெள்ளைச்சாமி அரட்ட,
” உண்மையை சொல்றேன்; என்னை விட்டுடுங்க” என்ற சோலையப்பன் அனுசா பிளாட்டில் தனியா தான் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டேன். அவ போறதும் வாரதும் நான் கவனிச்சிருக்கேன். ரொம்ப அழகா இருப்பா. எப்படியாவது அவள அடஞ்சிரணும்னு ரொம்ப நாளா ட்ரை பண்ணேன் .ஆனா முடியல என் கூட நல்லா பேசுவா . அந்த சந்தர்ப்பத்தப் பயன்படுத்தி, ஒரு ராத்திரி வேலையை முடிச்சிட்டு தனியா தான் வீட்டுக்கு வந்தா. அன்னைக்கு செக்யூரிட்டி கூட அதிகமாக இல்ல. அந்த நடு ராத்திரியில எல்லாம் தூங்கிட்டாங்க. தனியா வந்த அனுஷாவை நான் அன்பா பேசி இந்த கண்காணிப்பு அறைக்கு கூட்டிட்டு வந்தேன். எல்லா இடங்களையும் படம் பிடிக்கிறதுக்கு கேமரா இருக்கு. ஆனா கண்காணிப்பு அறைய படம்பிடிக்க கேமரா இல்ல. அதனால கண்காணிப்பு அறையில் வச்சு அவள நான் கெடுத்துட்டேன். அவ தற்கொலை பண்ணி செத்தது மாதிரி ஜோடனை பண்றதுக்காக ரெண்டு நிமிஷம் எல்லா கேமராவையும் ஆஃப் பண்ணிட்டு லிப்ட்ல அவளத் தூக்கிட்டு போய் தற்கொலை பண்ண மாதிரி அவளை பேன்ல கட்டித் தொங்கவிட்டு உள்பக்கமா தாழ்பாள் போட்டுட்டு, பின்னாடி இருக்கிற பால்கனி வழியா வெளியே குதிச்சிட்டேன்” என்று அனுஷாவைக் கொன்றதை தனது வாக்குமூலாகச் சொன்னார் சோலையப்பன்.
” அடப்பாவி வாழ வேண்டிய ஒரு பொண்ண இப்பிடி கொன்னுட்டியே? என்று வருத்தப்பட்ட வெள்ளைச்சாமி எல்லா இடங்களையும் படம்பிடிக்க கேமரா இருக்கு. ஆனா, எல்லா இடங்களையும் கண்ட்ரோல் பண்ற கண்காணிப்பு அறையில ஒரு கேமரா இல்ல. முதல்ல இந்த கண்காணிப்பு அறையில் ஒரு கேமரா வைங்க ” என்று அங்கிருந்த செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு சோலையப்பனைக் கைது செய்து அழைத்துப் போனார் வெள்ளைச்சாமி. அவர் சோலையப்பனை அழைத்துப் போவது, அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள எல்லா கேமராக்களிலும் பதிவாகின. பதிவு செய்யப்பட்ட படங்கள் எல்லாம் கண்காணிப்பு அறையில் பொருத்தப்பட்டிருந்த மானிட்டரில் தெரிந்தன. மானிட்டரில் தெரிந்து கொண்டிருந்த அத்தனை வீடியோக்களையும் கண்காணிப்பு அறையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவு செய்தது.
#சிறுகதை