செய்திகள்

கண்கள், கை–கால்களைக் கட்டி கங்கை ஆற்றில் இறக்கி விடப்பட்ட ‘மாயாஜால’ மன்னன் மாயம்

கொல்கத்தா, ஜூன் 17–

‘மாஜிக் ஷோ’ சாகசம் விபரீதமான சம்பவம் நேற்று மாலை நடந்திருக்கிறது.

கண்களை கருப்புத் துணியால் இறுகக் கட்டி, கைகளையும் – கால்களையும் கட்டி, கம்பிக் கூண்டில் நிறுத்தி கங்கை ஆற்றில் இறக்கி விடப்பட்ட மாயாஜால மன்னன் மாயமாய் மறைந்தார். அவரைத் தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. இருக்கிறாரா? இறந்து விட்டாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கொல்கத்தா மேஜிக் ஷோவில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

கொல்கத்தாவை சேர்ந்தவர் சஞ்சல் லாகிரி, பிரபல மாயாஜால மன்னன். இவருடைய மாஜிக் நிகழ்ச்சிகளில் ஒன்று ஹூப்ளி என்று சொல்லப்படும் நிகழ்ச்சி. உயிருக்கே ஆபத்தான நிகழ்ச்சி இது.

கை–கால் கண்களைக் கட்டி கங்கை நதியில் வீசப்பட்டு, உயிரோடு எழுந்து வருகிறேன் என்று ஒரு நிகழ்ச்சியை அவர் அறிவித்திருந்தார். அதற்காக நேற்று மாலை ஹவுரா பாலத்தில் உள்ள 28 ஆவது தூண் அருகே வந்து நின்றார் சஞ்சல். தன்னுடைய கண்களை கருப்பு துணியால் இறுகக் கட்ட வைத்தார். இதேபோல கைகளையும் கால்களையும் கயிற்றால் இறுக்கிக் கட்ட வைத்தார். பின் ஒரு க்ரேனை வரவழைத்து அதன் மூலம் தன்னை, ஓடிக்கொண்டிருந்த கங்கை ஆற்றில் இறக்கிவிட வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் கை கால் கட்டை அவிழ்த்த நிலையிலும், கருப்பு துணியை அவிழ்த்த நிலையிலும் சர்வ சாதாரணமாக அவர் தண்ணீரில் இருந்து எழுந்து வருவார் என்று அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

சஞ்சய் லாகிரி, கண்களை கை கால்களை கட்டி கிரேன் மூலம் தண்ணீரில் இறக்கிவிடப்பட்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மேலே வருவார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் பத்து நிமிடங்கள் ஆன நிலையிலும் அவர் வெளியே வராதது கண்டு ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர் பேரதிர்ச்சி அடைந்தனர். இது பற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்

மிகவும் ஆபத்தான இந்த நிகழ்ச்சி நடத்துவது பற்றி போலீசாருக்கு ஏற்கனவே அவர் தகவல் கொடுத்து அனுமதி வாங்கி இருந்தார். இருந்தும் ஹௌரா பாலத்திற்கு கிரேனைக் கொண்டு வந்தது எப்படி – எந்த அதிகாரி அவருக்கு இப்படி உயிருக்கு ஆபத்தான ஒரு நிகழ்ச்சியை நடத்த அனுமதி கொடுத்தார் என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று மாலை முதல் போலீசார் மாயாஜால மன்னின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். இரவு வந்தது. இருட்டானதால் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு மீண்டும் தேடுதல் பணியை இன்று காலை முதல் போலீஸ், தீயணைப்பு படை வீரர்கள், மேலாண்மை நிர்வாகம் ஊழியர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்

‘‘ஹூட்னி’’ என்பது ஒவ்வொரு மாயாஜால மன்னனும் தன்னுடைய கடைசி நிகழ்ச்சியாக நடத்தி பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் சாகசம் ஆகும்.

அரங்கில் நடைபெறுகிறது என்றால் பார்வையாளர்களிலிருந்து மூன்று பேரை மேடைக்கு அழைப்பார் மாயாஜால மன்னன். தன் கண்களை கருப்புத் துணியால் கட்ட வைப்பார். பிறகு கைகளையும் கால்களையும் கயிறால் கட்ட வைப்பார். அதற்குப் பிறகு ராட்சஸ மரப்பெட்டியில் தன்னை உட்காரவைத்து பெட்டியின் வாயை பெரிய பூட்டால் பூட்ட வைப்பார். பிறகு அந்த சாவியை பார்வையாளர்களை தங்களிடமே வைத்திருக்கும் படி செய்வார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பார்வையாளர்கள் அவர் எங்கே வருவார் எப்படி வருவார் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பார்வையாளர்கள் இருக்கும் அரங்கில் பின் வரிசையிலிருந்து அதுவும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து எழுந்து குரல் கொடுத்துக் கொண்டே வருவார். மகிழ்ச்சியில், பேரதிர்ச்சியில் ஆனந்தக் கூத்தாடும் பார்வையாளர்கள், அவரிடம் கைகுலுக்கி வாழ்த்து சொல்லுவது ஒவ்வொரு ஷோவிலும் வாடிக்கையாக நடக்கும் ஒரு வேடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *