சிறுகதை

கணிப்பு| ராஜா செல்லமுத்து

பார்த்துப் பார்த்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை நண்பர்களுக்கு போட்டுக் கொண்டிருந்தான்ஆதி.

அவன் எண்ணம் முழுவதும் அந்த திரைப்படம் உச்சத்தில் போய் உட்கார்ந்து தன்னை உலகத்தில் ஒருவராய் மாற்றிவிடும் என்பது அவரது உள்ளார்ந்த விருப்பம்.

அதற்காக அந்த திரைப்படத்தின் பாடல்களை அவ்வப்போது தன் நண்பர்களுக்கு போட்டு காண்பிப்பது வழக்கம். திரையரங்கிற்கு வராமலேயே அந்த திரைப்படம் ஆயிரம் முறைக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு இருக்கும்.

நண்பர்கள் தெரிந்தவர்கள் சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள் என்று அத்தனை பேருக்கும் அதைப் படத்தொகுப்பு அறையில் போட்டு காண்பிப்பது தான் ஆதிக்கு அலாதி விருப்பமாக இருந்தது.

திரைப்படத்தையும் பாடலையும் பார்த்தவர்கள் ஆதியை உச்சிமோந்து கொண்டாடினர்.

ஆதி இந்தப் படம், உலக சினிமா வரலாறு பேசப்படக்கூடிய ஒரு படமா இருக்கும். இந்த படம் வந்ததுக்கு அப்புறம் உங்களை எல்லாரும் வேற மாதிரி பார்ப்பாங்க. எங்கேயோ நீங்க போகப் போறீங்க என்று ஆதியை உசுப்பேத்தி விட்டனர் நண்பர்கள்.

இப்படி அவர்கள் புகழ்ந்து பேசும் வார்த்தைகளில் அதன் கால்கள் தரையில் நில்லாமல் வானத்திலேயே பறந்துகொண்டிருந்தது.

ஒருவர்கூட படத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டவே இல்லை. அவர்களுக்கு அது தெரியுமோ? தெரியாதோ? என்பது தெரியாது. திரைப்படத்தை பார்த்த ஒட்டுமொத்த நண்பர்களும் படத்தை ஓஹோவென்று கொண்டாடினார்கள் .இந்த அற்ப சந்தோஷமே ஆதிக்கு அடுத்து சிந்தனை செய்யாமல் போனது. அதனால் அவன் இந்த ஒரு திரைப்படத்திலேயே திரையுலகையே தன் கைக்குள் கொண்டு வந்ததாக நினைத்துக் கொண்டிருந்தான்.

இப்படி திரைப்படத்தை போட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கும் அன்று நண்பர் ஆனந்த்திற்கும் போட்டு காண்பித்தார் .

படத்தை பார்த்த ஆனந்த் படம் சுமாராக இருக்கிறது. அதில் வரும் இரண்டு பாடல்களையும் வெட்டி எடுத்து விடுங்கள் நல்லது என்று ஒரு கணிப்பு சொன்னார் .இதைக்கேட்ட ஆதிக்கும் அவனது உதவி இயக்குனர்களுக்கும் தலைக்கு மேல் கோபம் வந்தது.

என்ன இவன் எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. இவன் மட்டும் தான் தப்பா இருக்குன்னு சொல்றான் இவனுளுக்கெல்லாம் என்ன ரசனை இருக்கும். இவன் எல்லாம் இப்படி சினிமாவில் ஜெயிக்க போறான். இவனுக்கெல்லாம் யாரு படம் தரப் போறாங்களோ. இவன மாதிரி ஆட்களால் தான் நம்ம மாதிரி இருக்குற சினிமாக்காரன்கள தப்பாப் பேசறாங்க.

இனிமேல் இவன் வந்தா இந்த ஆபீசுக்கு உள்ள விடாதீங்க என்று ஆதியும் அவனது நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். அதை ஆனந்தின் முகத்திற்கு நேராகவே சொன்னார்கள்.

இனிமேல் நீங்க இந்த அலுவலகத்திற்கு வரக்கூடாது; அனைவரும் இந்த படத்தையும் பாடலையும் நன்றாக இருக்கு என்று சொல்லும்போது நீங்கள் மட்டும் எப்படி குறை சொல்லலாம் என்று ஆதி முகத்திற்கு நேராகவே கேட்டார்.

இல்லங்க நல்லா இல்லைங்கிறத நல்லா இல்லன்னு தானே சொல்ல முடியும். என்னால பொய்யெல்லாம் சொல்ல முடியாது . படம் சுமார் . பாடல்களும் ரொம்ப சுமார்; அந்த பாட்டு எடுத்தீங்கன்னா ஓரளவுக்கு படம் இருக்கும் இல்லன்னா கொஞ்சம் இழுவையாத்தான் இருக்கும் என்று ஆனந்த் அடித்துச் சொன்னார்.

அவனின் பேச்சு அங்கிருப்பவர்கள் ஒருவரும் கேட்கவில்லை. அவன் கணிப்பை யாரும் கருத்தில் கொள்ளவில்லை.

நாட்கள் ஓடின

ஆதியின் திரைப்படம் திரையரங்கிற்கு வந்தது. முதல்நாளே ஆதி தன் உதவி இயக்குனர்களுடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது படம் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் முகம் சுளித்தார்கள.

படம் சுமார்தான் அந்த ரெண்டு பாட்ட வெட்டி எடுத்து இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் என்று பார்வையாளர்களும் பத்திரிக்கையாளர்களும் ஆதியிடம் சொன்னபோது, இதற்கு முன்னால் அவரிடம் பேசிய அத்தனை பேர்களையும் மறந்து இருந்த அவனுக்கு ஆனந்த் மட்டும் தான் நினைவிற்கு வந்தான்.

அவன் சொன்னது சரிதான் ; அவன் சொன்னதை நாம் தவறாக நினைத்து விட்டோம்.அவன் கணிப்பு தான் சரியாக இருந்திருக்கிறது. அவன் எங்கே இருக்கிறான் என்று தேடி கண்டுபிடித்து கூப்பிட்டு வாருங்கள் என்றான் ஆதி. மற்றவர்களெல்லாம் தவறாகவும் இல்லை; நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக பொய்யாக ஒரு விஷயத்தை சொல்லிக்கொண்டு போனார்கள்.

ஆனால் ஆனந்த் மட்டும்தான் நம்மிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு பிடித்ததை பார்வையாளர்களுக்கு பிடித்ததை பகிரங்கமாக சொன்னான். அவனே உண்மையான விமர்சகன் அவனை அழைத்து வாருங்கள். அடுத்த படத்தில் அவன் தான் என் ஆஸ்தான ஆலோசகர் என்று ஆதி முதல் அவன் உதவி இயக்குனர்கள் வரை ஆனந்த்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்னொரு திரைப்படத்தின் விவாதத்தில் ஒட்டுமொத்த உதவி இயக்குனர்களும் சரி என்று ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கும், ஒரு காட்சியை இது தவறு என்று அடித்து சொல்லிக்கொண்டிருந்தான் ஆனந்த்.

அவனின் பேச்சுக்கு உதவி இயக்குனர்கள் யாரும் செவி கொடுக்கவில்லை. இயக்குனர் உட்பட என்னோட கருத்து இது இல்ல; பார்வையாளர்களாக தான், நான் இதை பதிவு பண்றேன். இந்தக் காட்சி ஜனங்களுக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு அந்தத் திரைப்பட விவாதத்தில் இருந்து வெளியே வந்தார்.

ஆதியும் அவன் நண்பர்களும் ஆனந்த் எங்கே இருக்கிறார் என்று விசாரித்து அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டு வந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *