இந்தூர், பிப்.24–
மத்திய பிரதேசத்தில் ‘வேலையில்லாமல் இருக்கும் கணவருக்கு மாதம் ரூ.5000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும்’ என கணவரை பிரிந்த மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜையினி பகுதியைச் சேர்ந்தவர் அமன்குமார் (23). இவர் இந்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (22) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் இரண்டே மாதங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். தனது கணவர் வரதட்சணை கேட்டு தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக நந்தினி புகார் அத்துள்ளார். பதிலுக்கு நந்தினி ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்துவதாக அமன் புகார் அளித்தார். மேலும் நந்தினியின் வற்புறுத்தலினால் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும், அதனால் தற்போது வேலை இல்லாமல் இருப்பதாகவும் அமன் தெரிவித்துள்ளார்.
இருதரப்பையும் இந்தூர் குடும்ப நல நீதிமன்றம் விசாரித்துள்ளது. விசாரணையில், நந்தினி போலீசாரிடம் பியூட்டி பார்லர் நடத்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் தான் வேலையில்லாமல் இருப்பதாகவும், கணவர்தான் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். முரண்பாடான கருத்தை நந்தினி தெரிவித்ததால், அவர் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை முன்வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, கணவருக்கு மாதம் ரூ.5000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் நந்தினிக்கு இந்தூர் குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.