சிறுகதை

கணக்கு சரிதானா – மு.வெ.சம்பத்

காலையில் உமா பரபரப்பானாள். தன் வீட்டிற்கு தனது அண்ணன் குடும்பத்துடன் தனக்கு திருமணம் ஆன பின் முதல் முதலாக வருகின்றான்.

உமா தனது கணவன் மகேசுவரனிடம் நீங்கள் அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்து விடுங்கள். அண்ணன் வந்து விட்டு சுப நிகழ்வுக்குச் சென்று வரவும் சரியாக இருக்குமென்றாள்.

தலையை வேகமாக ஆட்டி விட்டு மகேஸ்வரன் நகர்ந்தான்.

அண்ணன் தனது குடும்பத்துடன் வந்தான்.

உமா அவர்களை வரவேற்று நன்கு உபசரித்தாள். வந்தவர்கள் சிற்றுண்டி அருந்தி விட்டு சுப நிகழ்விற்குப் புறப்பட்டனர்.

அண்ணன் தனது தங்கையின் உபசரித்ததில் மகிழ்ந்து ஏம்மா மாப்பிள்ளை சாயந்திரம் சீக்கிரம் வந்து விடுவாரா என கேட்டான்.

கட்டாயம் வந்து விடுவார் என உமா கூறியதும் அண்ணன் தனது குடும்பத்துடன் கிளம்பினான்.

சாயந்திரம் வீடே களைகட்டியிருந்தது . உமா தடபுடலாக எதுவும் வேண்டாம் இரவு உணவுக்கு என்று கூறினாள் அண்ணி.

உமா சிரித்துக் கொண்டே செல்ல மகேசுவரன் நீங்கள் முதன் முதலில் வந்துள்ளீர்கள், சிறப்பாகத் தான் கவனிப்போம் என்றாள்.

உமாவின் அண்ணன் அடுத்த தடவை வந்தால் கவனிப்பே இருக்காதா என சிரித்துக் கொண்டே கேட்டாள்., அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என மகேசுவரன் கூறினான்.

சாப்பிட எல்லோரும் அமர்ந்தனர்.

உமா சாப்பாடு பரிமாறிக் கொண்டே தனது கணவன் மற்றும் அண்ணியிடம் தனது அண்ணனுடன் பால்யத்தில் நிகழ்ந்ததைக் கூற ஆரம்பித்தாள்.

அன்று சிறு வயதில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த அண்ணனை நான் அழைத்துக் கொண்டு அண்ணாச்சிக் கடைக்குச் சென்றேன். அங்கு பளபளவென வண்ணக் காகிதத்தால் மடிக்கப்பட்டிருந்த சாக்லேட் கேட்டேன்.

அண்ணாச்சி எடுத்துக் கொடுத்தார்.

நான் சற்று தள்ளிப் போய் அதைப் பிரித்துச் சாப்பிடத் தொடங்கினேன்.

அதிர்ந்த போன அண்ணன் செய்வதறியாது திகைத்து நின்றதோடு மட்டுமல்லாமல், வசமாக மாட்டிக் கொண்டோம், பணத்திற்கு என்ன செய்வது, அண்ணாச்சி திட்ட ஆரம்பித்தால், அது வீடு வரை கேட்குமே என்று பதறினான்.

அண்ணாச்சி வழக்கத்துக்கு மாறாக சற்று சிரித்த முகத்துடன் சாக்லேட் என்ன விலை என்று தெரியுமா எனக் கேட்டார்.

ஒரு பக்கம் தங்கையைப் பார்த்தான்; மறுபுறம் அண்ணாச்சியைப் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வது என்று தோன்றாமல் தனது பையில் சேகரித்து வைத்திருந்த சிறிய சங்குகள், சோழிகள், இரண்டு பழைய நாணயங்கள், அழகான கிளிஞ்சல்கள் இவைகளை எடுத்து அந்தக் கடையிலுள்ள மேஜையில் வைத்தான். அண்ணாச்சி சிரித்துக் கொண்டே, தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு சரி நீ செல்லலாம் எனக் கூறினார்.

புலிக்கு அகப்படாமல் மான் தப்பினால் எப்படியோ அப்படி அது உணருமே அது போன்று அவன் உணர்ந்து நகர்ந்தான்., இதற்குள் தங்கை சாக்லேட்டை முழுவதும் சாப்பிட்டு விட்டு உதட்டு ஓரங்களில் ஒட்டியிருந்ததை நக்கிக் கொண்டிருந்தாள்.

இவன் அவள் வருகில் வந்ததான். அவள் வா போகலாம் என்று நடையைக் கட்டினாள்.

ஒரு பக்கம் சாக்லேட் கிடைக்காத வருத்தம் ; மறு பக்கம் அண்ணாச்சியிடம் தப்பிய மகிழ்வு இவனுக்கு ஒரு சிறு சிரிப்பைத் தான் தந்தது.

அந்தக் கடையில் வேலை பார்க்கும் சிப்பந்தி, அண்ணாச்சி இந்தப் பொருட்களை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். இவையெல்லாம் சாக்லேட் விலைக்கு ஈடாகுமா என கேட்டார்.

அண்ணாச்சி அவனிடம் நமக்கு சாக்லேட் உயர்ந்தது. அவனுக்கு அவன் பொருட்கள் உயர்ந்தது. அவன் ஏதும் சாப்பிடவில்லையே, அவன் தங்கை தானே சாப்பிட்டாள் என்றார்.

நான் பணம் கேட்டால் அவன் இல்லையென்று தான் சொல்லுவான். அவனுக்கு மனதிற்குள் பணம் சேர்க்கும் ஆசை அதிகரிக்கும். ஏதாவது ஒரு வழியில் பணம் சேர்த்து மறுபடியும் மறுபடியும் பணம் பின்னால் அலைந்து வாழ்க்கையின் இலக்கை தடம் புரளச் செய்து விடுவான். தற்போது அவனுக்கு தன் தங்கை சாக்லேட் சாப்பிட்ட நிகழ்வு மட்டும் நினைவில் நிற்கும்.

இவர்கள் பெரியவர் ஆனதும் அவன் தங்கை அதைப் பற்றிக் கூறும் போது உலகம் நல்லவர்களாலேயே இயங்குகிறது என்றும் நாமும் நல் வழியில் வாழ வேண்டும் என்ற எண்ணமும் தழைத்தோங்கும் என்றார்.

தங்கையின் உதட்டில் ஒற்றியிருந்த சாக்லேட் அவன் கண் முன் தோன்றி அந்த வயதிலேயே சாதித்தோம் என்ற பெருமையுடன் வாழ்வில் எதையும் சாதிக்கும் வலிமை அவனுக்கு உண்டாகும் என்றார். சம்பாதிப்பது முக்கியமல்ல, நல்ல சமுதாயம் உருவாக நாமும் ஒரு கருவியாக இருக்க வேண்டுமென கூறிய அண்ணாச்சி சாயந்திரம் பார்க்கலாம் எனச் சொல்லி நகர்ந்தார்.

சாயந்திரம் ஐந்து மணிக்கு வந்த அண்ணாச்சி, அவன் தந்த பொருட்களினால் ஒரு அலங்காரமான கண்ணைக் கவரும் வண்ணத்தில் ஒரு வடிவமைப்பைச் செய்திருந்ததைக் கண்ட சிப்பந்தி அசந்து போய் நிற்க அப்போது அங்கு வந்த ஒருவர் இது என்ன விலையென கேட்டார்.

அண்ணாச்சி நியாயமான விலையைக் கூறினார்.

அவர் அதை வாங்கிச் சென்றதும் அண்ணாச்சி கணக்கு சரிதானா என்று புன்னகையுடன் கூறினார்.

சிப்பந்தி அண்ணாச்சியா கொக்கா என்றான்.

இந்த விற்பனையை வெகு நாட்களுக்குப் பிறகு சிப்பந்தி அண்ணனிடம் கூறினான் என்றாள் உமா.

மேலும் எனது சாக்லேட் ஆசை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றறியாத வயது எனக்கு என்றதும் அப்போது உமா அண்ணன் உமா உதட்டில் சாக்லேட் ஒட்டியிருக்கிறதெனக் கூற எல்லோரும் தன்னை மறந்து சிரிப்பில் ஆழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *