செய்திகள்

கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் புதிதாக 8 லட்சத்து 29 ஆயிரம் பேர் பதிவு; 12 லட்சம் பேருக்கு ரூ.462 கோடி உதவி

சென்னை, ஜன.31–

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 7 ஆண்டுகளில் புதிதாக 8 லட்சத்து 29 ஆயிரம் பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய கூட்ட அரங்கில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் தலைமையில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தின் 29–வது கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் காலியாக உள்ள 52 அலுவலக உதவியாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்தோர் பட்டியலுக்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. 66 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யவும், 111 கணினி இயக்குபவர் காலிப்பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி காலிப்பணியிட எண்ணிக்கைக்கு ஏற்ப 1:5 என்ற விகிதத்தில் முதல் நிலை பட்டியல் தயார் செய்யவும், பின்னர் பணி விதிகளின்படி கணினித்திறன் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யவும் வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.

16.5.2011 முதல் 31.12.2018 வரை 8,28,577 கட்டுமானத் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு மொத்தம் 12.10 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.462.55 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் ம.பாஸ்கரன் மற்றும் வாரிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்று அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *