செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து உருண்ட கார்: திருச்சி-சென்னை சாலையில் 3 பேர் பலி

பெரம்பலூர், ஏப். 24–

பெரம்பலூர் அருகேயுள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 45,) அவரது மனைவி லதா (வயது 40). மேலும் இவர்களது உறவினர்களான திருவாரூரைச் சேர்ந்த வேம்பு (வயது 65), வேம்புவின் மகன் ராமச்சந்திரன் (வயது 44) மற்றும் கோவையைச் சேர்ந்த மணிமேகலை (வயது 64) ஆகிய 5 பேரும், திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கமலக்கண்ணன் ஓட்டி வந்துள்ளார்.

3 பேர் பலி

இந்நிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகேயுள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி சுமார் 50 அடி தூரம் உருண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கமலக்கண்ணன், அவரது மனைவி லதா மற்றும் உறவினர் திருவாரூரைச் சேர்ந்த வேம்பு ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களுடன் பயணம் செய்த திருவாரூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், கோவையைச் சேர்ந்த மணிமேகலை ஆகியோர் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பாடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், உயிரிழந்த கமக்கண்ணண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தணிக்கை பிரிவு துறையில் பணிபுரிந்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.