நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்
பால்டிமோர் பாலத்தில் ஒரு சரக்கு கப்பல் மோத அந்த நீண்ட நெடிய பாலம் அப்படியே இடிந்து ,நொறுங்கி ,சுருங்கி, மடிந்து, சிதையும் காட்சிகள் வைரல் ஆனது;அந்த வீடியோ காட்சிகளை பார்ப்பவர்கள் மனம் கனமாவதை உணர முடிகிறது.
அமெரிக்கத் தலைநகரமான வாஷிங்டன் நகரில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பால்டிமோர் நகரில் உள்ள புரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எம்ஜிஆர் நலமுடன் நாடு திரும்பியபோது தமிழ்நாட்டில் பிரபலமான நகர் இது.
சரியாக 12.45 மணி பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ‘டாலி’ என்ற அந்த சரக்கு கப்பலை துறைமுகப் பகுதியில் இருந்து வெளியே சிறு கப்பல்கள் மூலம் இழுத்துச் சென்று படாப்ஸ்கோ நதியில் கப்பல் பயணிக்க அனுமதிக்கப்படும் நீர்நிலை பகுதியில் விட்டு விட்டு கரை திரும்பி விட்டனர்.
‘டாலி’ கப்பல் மாலுமிகள், அனைவரும் இந்தியர்கள் ; அதை தங்கள் வசம் இயக்கத்தை வரவழைத்துக் கொண்டே முன் செல்ல துரிதமாக பணியாற்றிக் கொண்டிருந்த அடுத்த 15 நிமிடங்களில் சிறு வட்டப் பாதையில் சென்று பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை நெருங்க ஆரம்பித்திருக்கிறது.
கப்பலின் கருப்புப் பெட்டியில் இருக்கும் தகவல்கள் தெரிவிப்பது அதிகாலை 1.24 மணி அந்த சரக்கு கப்பலின் மின்சார தொடர்பு நின்று விட பல்வேறு அபாய எச்சரிக்கைகள் எழுப்பட்டுள்ளது.
மாலுமிகள் நொடிப்பொழுதில் அதன் தானியங்கி விவகாரங்களை இயக்கிட மின்சாரம் திரும்பத் துவங்கி இருக்கிறது.
அந்த சில நொடிகளில் கப்பலின் வேகம் அதிகரிக்க கட்டுக்கடங்காத நிலையும் உருவாகியுள்ளது.
1.25 மணிக்கு மாலுமிகள் மேடே மேடே என அபயக்குரல் கொடுத்து எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் எனத் துயர அழைப்பை சர்வதேச தொலைத்தொடர்பு தகவல் அலைவரிசை செய்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தங்களை விட்டுச் சென்ற அந்த சிறு இழுவை கப்பல் மாலுமிகள் உடனே மறுபக்கம் திரும்பி உதவிக்கு செல்லத் துவங்கினர். அருகாமை கப்பல்களில் இருந்தோரும் எப்படி உதவுவது என யோசித்துக் கொண்டிருக்க அந்த சரக்கு கப்பலிலிருந்த மாலுமிகள் வெளியிட்ட தகவல் சாலைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் முதுகுத் தண்டில் அதிர்ச்சியை எழுப்பி நடுங்க வைத்திருக்கிறது. காரணம் அடுத்த 90 விநாடிகளில்… ஆம்; 1½ நிமிடத்தில் அந்த அதிகாலை நேரத்தில் – செவ்வாய் கிழமையில் அதிகாலை அலுவல்களுக்கும் அல்லது அழைப்புடன் வீடு திரும்புவோரும் அந்த மிக நீண்ட கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் நீண்ட நான்கு வழிச்சாலை கொண்ட பாலத்தில் மோதப் போவதாக தெரியவர இது குறும்புச் செய்தியா? போலித் தகவலா? என விவாதித்து குழம்பாமல் நொடிப்பொழுதில் அந்த பரபரப்பான வாகன பாலத்தில் உடனே வாகனங்கள் செல்லாமல் செய்துள்ளனர். பாலத்தில் இருந்தோரை அடுத்த 30 விநாடிகளில் பாலத்தை விட்டுச் சென்று விட வைத்தும் விட்டனர்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோர் வீடியோக்கள், புகைப்படங்களை மொபைல் போனில் எடுக்க ஆரம்பித்த போது தான் அந்த சரக்கு கப்பல் படுவேகத்தில் பாலத்தில் மோதி மொத்த பாலமும் அப்பளமாய் தூள்த்தூளாக நொறுங்க ஆரம்பித்தும் விடுகிறது.
ஆனால் அந்த அதிகாலையில் காலையில் செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த குழுமம் இடிபாட்டில் சிக்கி அந்த நதியில் வீழ்ந்துள்ளனர்.
பல லட்சம் டன் ஸ்டீலும் கான்கிரீட் கட்டுமான கலவைகளும் மழையாய் கொட்டிக் கொண்டிருக்க அதில் வீழ்ந்த பலரில் 6 பேர் காவல்துறை நீச்சல் வீரர்களின் துணிச்சல் மிகு உதவிப் பணியால் உயிருடன் மீட்கப்பட்டு விட்டனர். 3 பேரின் சடலமும் வெளியே கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
‘டாலி’ சரக்கு கப்பலின் மாலுமிகளின் பணி அந்த அபாய எச்சரிக்கை நேரத்தில் அபயக் குரல் எழுப்பிய வேகத்திலும் சாலை பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்து பாலத்தில் வாகன ஓட்டமின்றி வெறிச்சோட வைத்ததும் அபாரமான அவசர கால பிரதிபலிப்பு நடவடிக்கை அதாவது reflex action ஆகும்!
அந்த மாலுமிகளின் உடனடி செயல்திறன் காரணமாக அந்த பாலத்தில் வாகனங்களில் இருந்த பல நூறு அப்பாவிகளின் உயிர் தப்பித்துள்ளது.
இந்த அவசர கால பணியாற்றும் திறன் ராணுவ பயிற்சி பெற்றவர்களுக்கு இருக்க பார்த்திருப்போம்; சரக்கு கப்பல் மாலுமிகள் இப்படிப்பட்ட பயனாற்றும் திறன் பெற்றிருப்பது ஒரு வகையில் அவர்களுக்கு தரப்பட்டிருக்கும் பயிற்சியாக இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த நடு இரவு தாண்டிய அதிகாலை பொழுதிலும் கவனத்துடன், பொறுப்புடன் செயல்பட்ட வாகனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் செயல் உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட விபத்து நொடிப் பொழுதில் ஏற்பட்டு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்து செயல்பட வைக்கும் கட்டமைப்பு பாதுகாப்பு பலமாக இருப்பது தான் மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது.
இப்படி அதிகாலையில் விபரீதம் ஏற்பட்டதால் பல உயிர் பலியாகி இருக்கிறது என்று கூறி தப்பித்துக் கொள்வதை விட இயற்கை இடர், மனித கோளாறுகள் காரணமாகவே ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் 24 மணி நேரமும் உஷாராக பணியாற்ற வேண்டும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் துணிச்சல் செய்தி துயர சம்பவத்தையும் தாண்டி நெஞ்சை நெகிழ வைக்கிறது.
இந்தப் பாலம் 1977ல் பிரம்மாண்ட பாலமாக புதுப்பித்து சாலை வாகன பயன்பாட்டிக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த பாலத்தை மீண்டும் புதுப்பித்து நிர்மாணிக்க பல லட்சம் கோடிகள் ஆகி விடும்!
மேலும் இப்பாலத்தின் இடிபாடுகள் துறைமுக சேவையையும் முழுமையாக நிறுத்தி விட்டது. அதனாலும் பல லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதை அமெரிக்க அரசாங்கம் அதிரடியாக சீர் செய்ய எடுத்து வரும் வேகத்துடன் விவேகமாக செயல்பட்டு பணிகளை முடுக்கி விட்டிருப்பதையும் நாம் கூர்ந்து கவனித்து அனுபவ பாடம் படித்துக் கொண்டால் தான் வரும் கால நவீன இந்தியாவின் பாதுகாப்பு மேலும் உறுதியைப் பெறும்.