செய்திகள்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மூலிகை கசாயம்

Spread the love

10 நாளில் யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படாத நிலை உருவாக்குவோம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மூலிகை கசாயம்

சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், கமிஷனர் பிரகாஷ் வழங்கினார்கள்

வீட்டிலேயே மூலிகை கசாயம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி விளக்கம்

 

சென்னை, மே 17–

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு மூலிகை கஷாயத்தினை வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பகுதிவாரியாக திட்டமிட்டு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த ராயபுரம் மண்டலம், கோடம்பாக்கம் மண்டலம், திரு.வி.க.நகர் மண்டலம் ஆகிய பகுதிகளில் பகுதிவாரி திட்டமிடல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் இந்திய மருத்துவத் துறையினருடன் இணைந்து முழுமையாக தொற்று இல்லாத பகுதியாக மாற்றும் வகையில் வார்டு- 127, சீமாத்தம்மன் கோயில் தெருவில் சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆணையாளர் கோ.பிரகாஷ், நேற்று பொதுமக்களுக்கு மூலிகை கஷாயத்தினை வழங்கினார்கள். தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஆட்டோக்கள் மூலம் கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கஷாயம் வழங்கும் பணியினையும் துவக்கி வைத்தார்கள்.

நல்ல பயன்

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:–

முதலமைச்சர் ஆலோசனையின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பகுதிவாரியாக திட்டமிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பகுதிவாரி திட்டமிடலின் காரணமாக வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

ஏற்கனவே சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் சுனாமி நகர், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் பகுதிவாரி திட்டமிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி ஆணையாளருடன் இணைந்து நேற்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டது.

விழிப்புணர்வு

இந்தப் பகுதிவாரி திட்டமிடலில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முகக்கவசம் அணிதல், இடைவெளியுடன் இருத்தல் மற்றும் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுதல் போன்ற எளிய நடைமுறைகளின் மூலம் இந்த வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருத்துவ துறையினருடன் இணைந்து கபசுரக் குடிநீர், மூலிகை கஷாயம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ள சுமார் 34 ஆயிரம் பணியாளர்களுக்கு ஏற்கனவே கபசுரக் குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள கோடம்பாக்கம் மண்டலத்தில் பகுதிவாரி திட்டமிடல் பணி துவங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இம்மண்டலத்தில் உள்ள வார்டு–-127ல் மட்டும் 152 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பகுதியில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், 100 சதவீதம் தொற்றில்லாத பகுதியாக மாற்றவும், பகுதிவாரி திட்டமிடலில் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கஷாயங்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கஷாயம் தொடர்ந்து 10 நாட்களுக்கு அனைவருக்கும் வழங்கப்படும்.

எப்படி செய்வது?

இந்த மூலிகை கஷாயத்தில் சித்த மருத்துவ துறை வல்லுநர்களின் அறிவுரைப்படி, சுக்கு 100 கிராம், மிளகு 5 கிராம், திப்பிலி 5 கிராம், சிற்றரத்தை 30 கிராம், அதிமதுரம் 100 கிராம், ஓமம் 5 கிராம், கிராம்பு 5 கிராம், கடுக்காய் தோல் 50 கிராம், மஞ்சள் 10 கிராம் சேர்த்து அரைத்து, அதில் 10 கிராம் அளவு பொடியை 400 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி.லிட்டர் அளவிற்கு கொதித்த பின்னர் வெதுவெதுப்பான நிலையில் பருக வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் தொற்றின் வீரியம் பெருமளவு குறைக்கப்படும் என சித்த மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

10 நாளில் யாருக்கும் தொற்று வராது

கோடம்பாக்கம் மண்டலத்தில் இந்திய மருத்துவ துறையின் சார்பில் 15 மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகளின் முக்கிய நோக்கம் அடுத்த 10 நாட்களில் புதியதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாத நிலையை கொண்டு வந்து முற்றிலும் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மண்டலமாக மாற்றுவதேயாகும்.

கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கஷாயம் ஆகியவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது இந்திய மருத்துவத் துறையின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அரசின் இந்த முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் எஸ்.கணேசன், மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என். ஸ்ரீதர், இந்திய சித்த மருத்துவ இணை இயக்குனர் பார்த்திபன், மண்டல அலுவலர் எம்.பரந்தாமன், சித்த மருத்துவர் கே.வீரபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *