சென்னை, மார்ச் 31–
பூந்தமல்லி அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.2.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோளப்பஞ்சேரி சுங்கச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி அம்சவேணி தலைமையிலான போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.2.3 கோடி பறிமுதல்
அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 2.3 கோடி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பணம் பறிமுதல் செய்து பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையில் வட்டாட்சியர் கோவிந்தராஜ் முன்னிலையில் பணத்தை சரி பார்த்து சீல் வைத்து பூந்தமல்லி கருவூலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டது.
பெட்டி முழுவதும் அடுக்கப்பட்ட ரூபாய் கட்டுகள் நிறைந்திருந்ததால் சீல் வைத்த பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். பூந்தமல்லி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 2.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.