சிறுகதை

கட்டளைகள்- ராஜா செல்லமுத்து

நெருங்கி வரும் தேர்தல் களத்தில் அத்தனை கட்சிக்காரர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.

தங்கள் சாதனைகளையும் ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் பிரச்சனைகளையும் சொல்லி தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் வேட்பாளர்கள்.

ஒரு தெருவில் சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும் போது சாமிநாதன் அந்த வேட்பாளரை இடைமறித்தார். ஐயா உங்க பேர் என்ன? என்று சாமிநாதன் கேட்க,

‘என் பேரு கஜன்’ என்றான் வேட்பாளர்.

நல்ல பேரா இருக்கு. நீங்க எதுக்காக தேர்தலில் நிக்கிறீங்க? என்று சாமிநாதன் கேட்க,

மக்களுக்குச் சேவை செய்றதுக்கு என்று சிரித்துக் கொண்டே சொன்னான் கஜன்.

ஓ! மக்களுக்கு சேவை செய்யத்தான் நீங்க தேர்தல்ல நிக்கிறீங்க இல்லையா? என்று சாமிநாதன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரைச் சுற்றி அந்தத் தெருவில் இருந்த மக்கள் எல்லாம் சூழ்ந்து கொண்டார்கள்.

அத்தனை மக்களையும் பார்த்து கஜன் கையெடுத்துக் கும்பிட்டுத் தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டான்.

சரி, நாங்க உங்களுக்கு ஓட்டு போடுறோம். நீங்க எங்களுக்கு என்ன செய்வீங்க? என்று சாமிநாதனுடன் சேர்ந்து அங்கு கூடிய மக்கள் எல்லாம் கேள்வி கேட்டார்கள்.

இந்தத் தெருவுக்கு என்னென்ன வசதிகள் தேவையோ அதெல்லாம் செய்வேன் என்றான் கஜன்.

சரி, சேவை செய்ற உங்களுக்கு ஜெயிச்ச பிறகு வர்ற மாச சம்பளம் எதுக்கு? இப்போ நீங்க வெறும் வேட்பாளர் தான். நாங்க ஓட்டு போட்டு உங்களை ஜெயிக்க வச்சா நீங்க எம்எல்ஏ , மந்திரி, இந்த மாதிரி பதவிக்கு போகலாம். நாங்க தான் உங்கள செலக்ட் பண்றோம். நாங்க உங்களுக்கு ஓட்டு போடலைன்னா நீங்க சாதாரண மனுஷன் தான். அதனால நீங்க வாங்குற சம்பளத்தை அப்படியே எங்க தொகுதிக்கு தந்துரனும். அது மட்டும் இல்லாம எந்த ஊழலும் செய்யக் கூடாது. அப்படி நீங்க ஊழல் செஞ்சீங்கன்னா, நாங்க போட்ட ஓட்ட திருப்பிக் கேட்கிற உரிமையை கொடுக்கணும். நாங்க எல்லாம் சேர்ந்து உங்கள பதவி இறக்கம் செய்யிற அதிகாரம் குடுக்கணும். இப்ப இருக்குற உங்க சொத்து மதிப்ப எங்களுக்கு வெள்ளை அறிக்கை காட்டணும்.

நீங்க அஞ்சு வருஷம் பதவி வகிக்கும் போது வாங்குற சம்பளத்தை தவிர உங்க சொத்து பத்து எதுவும் அதிகரித்து இருக்கக்கூடாது. இந்த கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கிறதான உங்களுக்கு நாங்க ஓட்டு போட தயாரா இருக்கோம். உங்கள எம்எல்ஏ ஆக்குறோம் என்று வடிவழகன் சொன்னதை அங்கு இருப்பவர்கள் ஆமோதித்தார்கள்

இதையெல்லாம் கேட்ட கஜன் துருதுருவென விழித்தான்.

ஐயா ஏன் இப்படி விழிக்கிறீங்க? அரசியல்ல சேவை செய்றதுக்கு தானே வந்தீங்க. தொழில் பண்றதுக்கு இல்லையே? சேவை செய்கிற நீங்க சேவைய மட்டும்தான் நினைக்கணும்.

நாங்க இங்க வேலைய பார்க்கிறோம். எங்களுக்கு என்ன வேணுமோ அந்தச் சேவையை நீங்க செய்யுங்க. அது தானே அரசியலுக்கு வரக்கூடியவங்களுக்கு அழகு. இதுக்கெல்லாம் கட்டுப்பட்டீங்கன்னா, நீங்க எங்க தொகுதிக்கு வரலாம். வாக்கு சேகரிக்கலாம். 100% உங்களை நாங்க எம்எல்ஏ பார்க்கிறோம் என்று அந்த தெரு மக்கள் எல்லாம் பேசினார்கள்.

அங்கு கூடியிருந்த மக்கள் எல்லாம் பேசிய பேச்சைக் கேட்டு ஆரவாரம் செய்தார்கள்.

கஜனின் வேட்டி அவரை அறியாமலே கீழே உருவி பூமியில் வழிந்தோடியது.

ஐயா வேட்டி அவுந்திருச்சு எடுத்து கட்டுங்க என்றபோது கீழே விழுந்த வேட்டியை அப்படியே அள்ளிச் சொருகிக் கொண்டு தலைக்கு மேலே இரு கைகளையும் தூக்கி கும்பிட்டபடி அந்தத் தெருவையை விட்டு ஓடினான் கஜன்.

என்னையா சேவை செய்ய வர்றேன்னு சொல்லிட்டு கோரிக்கை வைக்கவும் கோவிச்சுட்டு போறாரு என்று ஒரு கிழவி கேட்க, இதுதான் இந்த அரசியல்வாதிகளோட லட்சணம் என்று சாமிநாதன் சொல்ல,

இங்கு எல்லாம் அப்படித்தாங்க. அரசியல் அப்படிங்கறது பெரிய பிசினஸ். பணம் போட்டு பணம் எடுக்குறாங்க. இனிமே நாம ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது. நம்ம உரிமையும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

நம்ம தெருமட்டுமில்ல. நம்ம தொகுதிக்கு வர்ற யாராயிருந்தாலும் இப்ப சொன்ன கோரிக்கையை வச்சோம்னா. ஒரு பய இங்கு நிக்க மாட்டான்.

உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யணும்ங்கிறவன் மட்டும் தான் நிப்பான். அப்படி ஆள நாம கண்டுபிடிப்போம். வாங்க அடுத்து எவன் வர்றான்னு பார்க்கலாம் என்ற போது

வாக்காளப் பெருமக்களே எங்களை வாழ வைக்கும் தமிழ் சொந்தங்களே…

உங்கள் இல்லம் தேடி வருகிறார் வேட்பாளர் மாசாணி என்று ஒலிபெருக்கிச் சத்தம் கேட்டது.

வரும் வேட்பாளரை எதிர்பார்த்து கேள்விக்கணைகளை தொடுப்பதற்குத் தயாராக இருந்தனர் அந்தத் தெரு மக்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *