கட்டபொம்மன் – 4
செப்டம்பர் 6ல் கோட்டையை விட்டு தப்பி சென்று கோலார்ப்பட்டி பாளையத்துக்கு செல்கிறார் கட்டபொம்மன். இந்த தகவல் எதிரி பாளையக்காரர்களுக்கு தெரிந்து, கோலார்ப்பட்டி அரண்மனையை அவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அங்கிருந்தும் கட்டபொம்மன் தப்புகிறார்.
அங்கிருந்து மெட்ராஸ்க்கு சென்று நியாயம் கேட்க முடிவு செய்து மெட்ராஸ்க்கு பயணமாகிறார் கட்டபொம்மன். செல்லும் வழியில் திருக்களம்பூர் காடுகளில் மறைந்து இருக்கிறார்கள்.
அதற்குள் ஆங்கிலேயர்கள், அனைத்து பாளையக்காரர்களுக்கும், கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு அடைக்கலமோ ஆதரவோ அளித்தால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என தகவல் அனுப்புகிறார்கள். அதில் கட்டபொம்மனின் தலைக்கு சன்மானம் தருவதாக சொல்லியும் தகவல் அனுப்புகிறார்கள்.
பாவாலி பாளையத்தில் ஆங்கிலேய அதிகாரி பானர் மேன் வைத்த செப்பு பட்டயம் இன்று உள்ளது. அதில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவு அளிக்கும் பாளையக்காரர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த தகவல் உள்ளது. இந்த செப்பு பட்டயம் பாவாலி எனும் ஊரில் கல்தூணில் இன்றும் உள்ளது.
நண்பனின் துரோகத்தால்…
நண்பர் ஒருவர் அழைத்ததன்பேரில் அவரது அரண்மனையில் தங்குகிறார் கட்டபொம்மன். எப்போதும் இடையில் குறுவால் வைத்துக்கொள்வது கட்டபொம்மனுக்கு வழக்கம். நண்பனின் அரண்மனையில் ஆபத்து எங்கிருந்து வரப்போகிறது என்று எண்ணி, குறுவாளையும் கழட்டி வைத்து விட்டு கட்டபொம்மன் உறங்குகிறார்.
இதற்குள், அந்த நண்பர், ஆங்கிலேயருக்கு கட்டபொம்மன் தனது அரண்மனையில் இருக்கும் தகவலை தெரிவிக்கிறார். நான் மிகவும் கஷ்டப்பட்டு கட்டபொம்மனை கைது செய்து வைத்து இருக்கிறேன்.
கட்டபொம்மனை ஒருநாள் வைத்து இருப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது தங்களுக்கு தெரியும். அதனால் எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக வந்து கட்டபொம்மனை கைது செய்து அழைத்து செல்லுமாறு கடிதம் எழுதுகிறார்.
நடுராத்திரியில் தூங்கிக்கொண்டு இருந்த கட்டபொம்மனை ஆங்கிலேயேர்கள் சூழ்ந்து கொண்டு கைது செய்கின்றனர். கைதி ஆடையில் கட்டபொம்மன்
புதுக்கோட்டையில் செப்டம்பர் 23ந் தேதி கைது செய்து, கைதிகள் ஆடை போட்டு, நடத்தியே கூட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டையிலிருந்து மதுரை வழியாக கயத்தாறுக்கு படைகள் சூழ பலத்த பாதுகாப்புடன் கட்டபொம்மனை அழைத்து வருகின்றனர்.
அக்டோபர் 15ந் தேதி அதிகாலை கயத்தாறுக்கு வந்து சேருகின்றனர். கட்டபொம்மன் கைது செய்யப்பட்ட விவகாரம் மக்களுக்கு தெரிந்தால் புரட்சி வெடிக்கும் என பயந்த ஆங்கிலேயர்கள், கட்டபொம்மனை கைது செய்தது மக்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்து இருக்கிறனர்.
மறுநாள் காலையில் கயத்தாறு கோட்டைக்கு முன்பு வைத்து, லூசிங்டன், பேனர்மேன், மெகாலே என எல்லோர் முன்னிலையில் விசாரணை நடக்கிறது.
கட்டபொம்மா.., நீ ஏன் வரிசெலுத்தவில்லை?, கம்பெனிக்கு ஏன் அடிபணியவில்லை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கப்படுகிறது.
இதெல்லாம் தவறுதானே என்று ஆங்கிலேயர்கள் கேட்டபோது, உங்களுக்கு அது தப்பு மாதிரி இருக்கிறது.
எனக்கு தப்பு என்று தோன்றவில்லை என்று கட்டபொம்மன் பயப்படாமல் கூறியிருக்கிறார். எத்தனை தடவை கேட்டாலும் நான் இதே பதிலைத்தான் கூறுவேன் என்று கம்பீரம் குறையாமல் பேசியிருக்கிறார்.
![]()





