கவர்னராக ஆர்.என்.ரவியே தொடர பிரதமருக்கு கோரிக்கை
சென்னை, ஜன. 24–
கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் காட்டமாக பேசினார்.
மேலும் தமிழகத்தின் கவர்னராக ஆர்.என்.ரவியே தொடர வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 51 பேர் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3000 பேர் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
மாற்று கட்சியிலிருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு தி.மு.க. துண்டை போர்த்தி, மு.க.ஸ்டாலின் வரவேற்று, அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக பெரியார் சிலையை வழங்கினார்கள்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பிற கட்சி பொறுப்பில் பணியாற்றிய நீங்கள் தலைமை முறையாக இல்லை என்பதால் தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள். தி.மு.க.வில் சேருவதற்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். தி.மு.க. என்பது நேற்று முளைத்த காளான் அல்ல; தி.மு.க.வை பேரறிஞர் அண்ணா உருவாக்கிய போது, இக்கழகம் ஆட்சிக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு பணியாற்ற வேண்டும், ஏழை – எளிய – பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும், பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொடங்கப்படுகிறது என்றார்.
இதற்கு பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்தோம். 1949ம் ஆண்டு துவங்கி, 1957ம் ஆண்டு தான் தேர்தல் களத்திற்கே வந்தோம். அப்போது 15 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். 1962-ல் 50-க்கும் மேற்பட்ட இடத்தில் வென்று எதிர்க்கட்சியானது தி.மு.க.
நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் அக்கட்சியின் பெயரை உச்சரிக்கலாம்.
கட்சி தொடங்கியதுமே
ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்
ஆனால் இன்றைக்கு சிலர் கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று கூறும் நிலை நாட்டில் இருந்துக்கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி, நாங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என சிலர் சுற்றிக்கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் யார், எப்படிப்பட்டவர், எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை
அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை. இது தான் உண்மை. அவர்களின் பெயரை சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை.
நாட்டுக்காக உழைப்பது போல நாடகம் ஆடுபவர்கள் இருக்கிறார்கள். அவதூறாக பேசுபவர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். இங்கே இணைபவர்கள், தாங்கள் முன்பிருந்த கட்சியின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை என கூறுகிறார்கள்.
கவர்னரை
மாற்ற வேண்டாம்
அடுத்த சட்டசபை கூட்டத்திற்கும் கவர்னர் வர வேண்டும். நாங்கள் கவர்னர் உரையை எடுத்து கொடுப்போம். ஆனால் அடுத்த முறையும் தனது உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேற வேண்டும்.
கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் மதத்தை மையமாக வைத்து அவர் பேசும் பேச்சுகள் தி.மு.க.வை வளர்க்கிறது; அதனால் கவர்னரை மாற்ற வேண்டாம். இதே கவர்னர் தமிழ்நாட்டுக்கு தொடர வேண்டும் என பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது; ஆனாலும் மீண்டும், மீண்டும் சொல்வோம். முதலில் நீங்கள் யாரை நம்பி சென்றீர்களோ அவர்களும் தொடர்ந்து பேச வேண்டும். மாற்றுக் கட்சியினரை அழைத்து வாருங்கள், வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். மக்களுக்கு இந்த ஆட்சியின் சாதனைகளை நினைவுபடுத்தினாலே போதும். 200 அல்லது 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறலாம். நிச்சயமாக சொல்கிறேன் 7வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.