செய்திகள்

கட்சியில் பலரும் போர்க்கொடி உயர்த்தியதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா

லண்டன், ஜூலை.8-

கட்சியில் பலரும் போர்க்கொடி உயர்த்திய நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக 2019-ம் ஆண்டு, ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் பதவி வகித்து வந்தவர் போரிஸ் ஜான்சன் (வயது 58).

கொரோனா தொற்று பாதித்து, மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியவர் இவர்.

ஆனால் இவர் கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி தனது வீட்டில் மதுவிருந்து நடத்தி பிரபலங்களை பங்கேற்க வைத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த குற்றத்துக்காக அவர் அபராதம் செலுத்தினார். நாடாளுமன்றத்தில் மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் அவருக்கு எதிராக கட்சியில் பலரும் போர்க்கொடி தூக்கினர்.

இதில், கடந்த மாதம் 6-ந்தேதி கட்சியில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் போதுமான எம்.பி.க்களின் ஆதரவை பெற்றதால், போரிஸ் ஜான்சன் பதவி தப்பியது.

ஆனால் அவர் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய கிறிஸ் பிஞ்சர் என்ற எம்.பி.யை துணை தலைமை கொறடாவாக நியமித்ததும், அவரது பிரச்சினையை கையாண்ட விதமும், அவருக்கு எதிராக கட்சியில் மீண்டும் போர்க்கொடி தூக்க வைத்தது. கிறிஸ் பிஞ்சர் பதவி விலகினார்.

அவரை நியமித்த தனது தவறுக்காக போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டார்.

ஆனாலும் பதவி நியமன விவகாரங்களில் அவர் நடந்து கொண்ட விதம், எதிர்க்கட்சியான தொழிற்கட்சியில் மட்டுமல்லாது தனது சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலும் தொடர்ந்து எதிர்ப்பை சம்பாதித்து தந்தது.

இந்த நிலையில் பிரதமர் பதவி மீது நீண்ட காலமாக கண் வைத்துள்ள இந்திய வம்சாவளி நிதி மந்திரி ரிஷி சுனக்கும், சுகாதார மந்திரி சாஜித் ஜாவித்தும் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி அவர்கள் பதவி விலகினர்.

அவர்களைத் தொடர்ந்து முக்கிய பதவிகளில் இருந்த பலரும் வரிசையாக பதவி விலகத் தொடங்கினர்.

இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என நிர்ப்பந்தம் அதிகரித்தது. இது அவருக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியது.

இனியொரு வழி இல்லை என்ற நிலையில், போரிஸ் ஜான்சன் நேற்று கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அதே நேரத்தில் மற்றொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், தான் பிரதமர் பதவியில் தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் பதவிக்கு பதவி விலகிய இந்திய வம்சாவளி நிதி மந்திரி ரிஷி சுனக் (இவர் புகழ் பெற்ற ‘இன்போசிஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி மகள் அக்‌ஷதாவின் கணவர்), வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ், பதவி விலகிய சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் என பலரது பெயர்கள் அடிபடுகின்றன.

இங்கிலாந்து பிரதமர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published.