செய்திகள்

கட்சியில் சாதியப் பிரிவினை, சமூக படுகொலை: சீமான் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திடீர் விலகல்

Makkal Kural Official

சென்னை, பிப். 23–

கட்சியில் சாதியப் பிரிவினைகளும், சமூக படுகொலைகளும் நடைபெறுவதை கண்டு அமைதிகாக்க முடியவில்லை என, சீமான் கட்சியில் இருந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களுடன் பயணித்த நான் இன்றுடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இரண்டு தடவை சட்டமன்ற வேட்பாளர், ஒருமுறை சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆக என்னை நிறுத்தி எனக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் உழைத்த என் தம்பிகள், தங்கைகளை விட்டு கனத்த இதயத்துடன் பிரிகிறேன். நான் உங்களை விட்டு பிரிவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம், வருத்தமடைய செய்யலாம்.

சாதிப்பிரிவினை–சமூக படுகொலை

ஆனால் கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதிப்பிரிவினைகளும், சமூக படுகொலையையும் கண்டு என்னால் இதில் பயணிக்க முடியவில்லை. பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர் யார் பொருளாளர் என்பதை அறியாமல் பயணிக்க விரும்பவில்லை.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல், கட்சியின் பொது செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவரை நியமித்துள்ளது சரியா? கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வருகிறேன்.

இன்னும் சிலரை கட்சியின் பொருளாளர் ஆகவும், துணை செயலாளர் ஆகவும் நியமித்து உள்ளதாக கூறப்படுவது உங்களுக்கு தெரியுமா? கட்சியில் சீமான் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளதா? சீமான் அருகில் உள்ள மூன்று பேரை தவிர்த்து நீங்கள் சீமானை சகஜமாக பார்க்கமுடிகிறதா? என்னை சீமான் 8 ஆண்டுகளாக கண்ணியமாக நடத்தி மரியாதை கொடுத்து சிறப்பித்தமைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *