சிறுகதை

கடைசி நேரப்பூக்கள் – ராஜா செல்லமுத்து

அங்கமாளுக்கு அன்று இருப்புக் கொள்ளவில்லை. நகரும் பொழுதுகள் எல்லாம் அவளுக்கு ரணமாக இருந்தது.

கட்டி வைத்த மொத்த பூக்களும் அப்படியே தங்கி விட்டன. ஒரு சரம் கூட விக்கவில்லை என்று அவள் கன்னங்களில் சரஞ்சரமாய் கண்ணீர் பூக்கள் வழிந்து கொண்டிருந்தன .

பிரதான சாலையில் அங்கம்மாளின் பூக்கடை இருந்ததால் ,எப்படியாவது பூக்களை விற்று விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

அன்று என்னவோ தெரியவில்லை கொஞ்சம் பூக்கள் விற்பனையான பிறகு மொத்த பூக்களும் மெத்தை போட்டு அங்கேயே தங்கி விட்டன.

மணி இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் .வாகனங்களின் வரத்து குறைவாக இருந்தது .அருகருகே இருந்த பூக்கடைக்காரர்கள் எல்லாம் கடையைக் காலி செய்து விட்டு கிளம்பி இருந்தார்கள் .

முன்பெல்லாம் அங்கம்மாளின் கடை மட்டும்தான் இருக்கும் இப்போது அவள் வைத்திருக்கும் இடத்திலிருந்து வரிசையாக 5, 6 கடைகள் இந்த சின்ன பூக்கடைக்கு கூட போட்டி வந்து விட்டது போலும் என்று அவளாக நினைத்துக் கொண்டாள்.

எப்படியும் தன்னிடம் பூ வாங்கும் வாடிக்கையாளர்கள் தன்னை விட்டு சென்று விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை அங்கம்மாளுக்கு இருந்தது .

அன்று ஏனோ தெரியவில்லை வாடிக்கையாளர்கள் வரத்து கூட கம்மியாக இருந்தது .

எட்டு மணியில் இருந்து பூக்களைக் கூவி விற்க முடிவு செய்தாள். மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி உதிரிப்பூ என்று அவள் குரல் கொடுத்து விற்கும் போது சோகம் தலை தூக்கியது.

குரல் கொடுக்கும் போதெல்லாம் அவள் குரல்வளையில் சோகம் தாெக்கி நின்றது.

ஆயிரம் ரூபாய்க்கு மேல் பூக்கள் இருக்கும் கடையில் இந்த பூக்களை எல்லாம் எப்படி இழப்பது? ஏற்கனவே பூக்களெல்லாம் கொஞ்சம் வாடி இருந்தன.

இன்றும் விற்பனையாகாததால் மொத்த பூக்களும் கீழே கொட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது அங்கம்மாவின் கடைக்கு ஐந்து முறைக்கு மேல் வந்து சென்றிருந்தான் கந்து வட்டிக்காரன்.

கொஞ்ச நேரம் ஆகட்டும், கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்தாள் அங்கம்மாள்.

அது எனக்கு தெரியாது .இங்க பாருமா நீ பூ விக்கிறயோ புண்ணாக்கு விக்கிறயோ எனக்கு தெரியாது.

நைட்டு எட்டு மணிக்குள்ள டான்னு கைல காசு வந்துடனும் .அதுக்கு தான் தண்டல் வாங்கினேன் என்று மிரட்டி விட்டு சென்றான் தண்டல்காரன்.

ஐயா இன்னைக்கு வியாபாரம் சரியா இல்ல. நாளைக்கு சேர்த்து கொடுக்கட்டுமா? என்று அங்கம்மாள் சொன்னபோது

அதெல்லாம் முடியாது நஷ்டத்துல ஓடுது கடை. இதுல எங்க இருந்து நீ பணம் கொடுப்ப ?என்று முறைத்து விட்டு சென்றான் தண்டல்காரன்.

பந்து போல உருட்டி வைத்த பூக்கள் எல்லாம் அப்படியே இருந்தன. மணி பத்தை கடந்த போது இனி மனுஷன் நடமாட்டம் இருக்காது. கார் ,வண்டியும் ஓடாது இன்னைக்கு ஏன் இப்பிடி? என்று நொந்து கொண்டாள்.

கவலையோடும் கண்ணீரோடும் விற்காத பூக்களை அள்ளிக் கொண்டிருந்தாள்.

இன்னைக்கு ராத்திரி இருந்தா இந்த மொத்த பூவும் கெட்டுப் போகும் .எதுக்கு இத வீட்டுக்கு கொண்டு பாேய் வச்சிட்டு இங்கேயே தூக்கி வீசிட்டு போக வேண்டியதுதான் முதலில் இருக்கும் நஷ்டம் லாபத்துக்கு நஷ்டம் என்று நொந்து கொண்ட அங்கம்மாள் பூக்களை வீச தயாராக இருந்தாள்.

மொத்தத்தையும் அள்ளி தூர வீசப் போகும் நேரம் இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்தார்கள்.

பாட்டி பூ இருக்கா ?என்று கேட்க

இருக்கு ராசா எத்தனை முழம் வேணும்? என்று அங்கம்மாள் கேட்க

முழமா அதெல்லாம் பத்தாது மொத்த பூவையும் கொடு. எங்கள் பெரிய தாத்தா இறந்துட்டாரு. மணி பத்து அதுக்கு மேல ஆச்சு எந்த பூக்கடை இல்ல. அதான் பூவ தேடி அலைஞ்சோம் .நல்ல வேள நீ வச்சிருந்த. எல்லா பூவும் குடு என்ற போது தூர வீசி எறிய இருந்த பூக்களையெல்லாம் வந்தவரிடம் கொடுத்தாள் அங்கம்மா

நல்லவேளை நீயாவது பூ வச்சிருந்தயே. இல்லன்னா கிழவன் பூ இல்லாம தான் படுத்து கிடந்து இருப்பான். இந்தா வச்சிக்க என்று அங்கம்மாளின் கையில் பணத்தை திணித்துவிட்டு தங்கள் இரு சக்கர வாகனத்தில் பறந்தார்கள் இந்த இளைஞர்கள்.

எவ்வளவு கொடுத்திருக்க போறாங்க 100 ரூபாய் என்று நினைத்துக் கொண்டே அவர்கள் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தாள் அங்கம்மாள்.

அத்தனையும் 500 ரூபாய் தாள்களாக நான்கு தாள்கள் இருந்தன

என்னது 2000 ஆ?

ஆயிரம் ரூபாய்க்கு கூட பூ வராது .இவங்க 2000 கொடுத்து இருக்காங்களே கடவுளே இதுதான் உன்னோட திருவிளையாடலா? ரொம்ப நன்றி சாமி.

எப்படி தண்டல் கட்ட போறேன். இன்னைக்கு ராத்திரி சாப்பாடு என்ன செய்யப் போறேன். நாளைக்கு போய் எப்படி பூ வாங்குறது அப்படின்னு ரொம்ப கவலைப்பட்டு இருந்தேன். கடைசி நேரத்துல கடவுள் கண்ணை திறந்து ட்டான் என்று தனக்குள்ளே சந்தோசம் அடைந்தாள் அங்கம்மாள்.

தண்டல் காரனுக்கு தண்டலை கொடுத்துவிட்டு, வீடு நோக்கி நடந்தாள்.

“எல்லா தாமதங்களும் ஏதோ ஒரு நல்ல விஷயத்தில் தான் முடியும்” என்று வாசகம் ஒரு சுவரில் எழுதி இருந்தது.

அவளுக்கு எழுதப் படிக்க தெரியவில்லை என்றாலும், அந்த வாசகத்தை அவள் கடந்து செல்லும்போது,

காற்று அதை வாசித்து அங்கம்மாளின் காதில் போய் மழை நிறைத்தது.

சந்தோஷத்தோடு தன் வீடு நோக்கி நடந்தாள், அங்கம்மாள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *