இந்த நேரம், இந்த இடம், இந்தப் பயணம் இத்தோடு முடிந்து விட்டது. இனி தொடர்வதற்கு வாய்ப்பு இல்லை. ஓடின சக்கரங்கள் ஓய்வு பெறப் போகின்றன. இனி சிவம் நமக்காக கார் ஓட்ட மாட்டான் என்று ஓட்டுநர் இருக்கைக்கு மேலே இருந்த கண்ணாடி வழியாக அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள் சிந்து.
“இனிமேல் நடக்காது. அழகாக அவன் ஸ்டேரிங்கை வளைத்து ஓட்டும் இயல்பைப் பார்க்க முடியாது. இனி அவனை நாம் சந்திக்கப் போகவில்லை .இந்தத் தார்ச்சாலை பயணம் அவனுடன் போகும்போது எவ்வளவு இனித்தது. இன்றோடு கல்லூரி முடியப் போகிறது. அவனும் இனி வரப்போவதில்லை. இனி எப்போது காண்பேன் என் சிவத்தை ?என்று மனதுக்குள் கவிதையாய் அழுது கொண்டு வீட்டிற்கு வந்தும் காரை விட்டு இறங்காமல் அங்கேயே அமர்ந்திருந்தாள் சிந்து
இதைச் சற்றும் எதிர்பார்க்காத சிவம் ஓட்டுனர் இருக்கையில் இருந்து கொண்டு கண்ணாடி வழியாக சிந்துவைப் பார்த்தான்.
ஏன் இந்தப் பொண்ணு இப்படி உட்கார்ந்துட்டு இருக்கு ? எப்பவுமே கார் வீட்டுக்கு வந்ததும் எந்திரிச்சு ஓடிவிடுமே? இன்னைக்கு ஏன் இத்தனை மௌனம் .சிந்து முகத்தில் ஏதோ ஒரு பிரச்சனை முகாமிட்டு இருக்குது. அது என்ன? என்று குழப்பத்தோடு தன் இடது கை பக்கம் இருந்த கண்ணாடி வழியாக பார்த்தான் சிவம். சிந்துவின் கண்கள் கலங்கி இருந்தன. இடது கையில் இருந்த வளையலை வலது கையால் மேலும் இழுத்துக் கொண்டு கண்களில் நிரம்பி வழியும் கண்ணீரை இமையை விட்டு கீழே இறக்காமல் மனதுக்குள்ளே அழுது கொண்டிருந்தாள் சிந்து
ஓட்டுநர் இருக்கையை விட்டு எழாமல் இருந்தான் சிவம் :
” இது அவங்க கார். அவங்க இடம். அவங்க உட்காரலாம். எந்திரிச்சு போகலாம்? ஆனா நமக்கு இதுல எந்த உரிமையும் இல்லை. எப்படி கேட்கிறது இதை ” என்று குழம்பிய படியே தன் இருக்கையை விட்டு எழாமல் கண்ணாடியின் வெளியே பார்த்துக் கொண்ட சிந்துவின் செய்கையை ஒருவாராக ரசித்துக் கொண்டும் இருந்தான் சிவம்
ஏறக்குறைய சிந்துவுக்கும் சிவத்துக்கும் இரண்டு ஒரு வயது வேண்டுமானால் வித்தியாசப்படலாம் அவ்வளவுதான் பெரிய இடைவெளி எதுவும் இல்லை. அவளைக் கல்லூரிக்கு தினமும் அழைத்துச் செல்வதும் பத்திரமாக மாலை கூட்டி வருவதும் தான் சிவத்தினுடைய வேலை. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கார் ஓட்டியிருந்தாலும் சிந்துவிடம் அநாகரிகமாக அவன் நடந்து கொண்டதில்லை. தப்பான வார்த்தைகளை பிரயோகப்படுத்தியதில்லை ரூம் போடலாமா? தப்பு செய்யலாமா? என்று அவன் ஒருபோதும் அவளிடம் கேட்டதில்லை. இப்படி ஒரு தங்கமான மனிதனை எப்படி தவற விடுவது? என்று மனதில் ஆடி அடித்தது போல நினைத்துக் கொண்டு காரிலேயே அமர்ந்திருந்தாள் சிந்து.
பொறுத்து பொறுத்து பார்த்த சிவம்
இறங்கலையா?
என்று வாய் திறந்து கேட்க
காதில் தொங்கும் காதணிகள் அசைய இல்லை என்று தலையாட்டினாள் சிந்து.
சரி இது அவங்க வீடு அவங்க கார். எப்ப வேணாலும் இறங்கி போகலாம்
என்று தன் காரை விட்டு வெளியே வந்தான் சிவம். அதுவரை ஓட்டுநரின் இருக்கைக்கு மேல் இருந்த கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்த சிந்து இப்போது காரை விட்டு வெளியே இறங்கிய சிவத்தை பார்த்தபடி இருந்தாள்
என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு? ஏன் இறங்கல?
என்று மனதுக்குள் புழுங்கியவாறு நினைத்த சிவம் சிறிது நேரம் அங்கே நின்று கொண்டிருந்தான்
என்ன நினைத்தாளே தெரியவில்லை . மணி நேரத்திற்கு பிறகு அந்தக் காரை விட்டு வெளியே இறங்கினாள்
யப்பா இப்பயாச்சும் இறங்கினாளே
என்று பெருமூச்சு விட்டான் சிவம். காரை விட்டு இறங்கிய சிந்து வீட்டுக்குள் நுழையும் போது மனதிற்குள் சுமந்திருந்த அத்தனை ஆசைகளையும் ஒன்றாகத் திரட்டி சிவத்தை திரும்பிப் பார்த்தாள் அவள் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
ஒரு பொண்ணா சொல்லுவா? நான் காதலிக்கிறேன்னு இவ்வளவு நாள் என் கூடவே இருந்துட்டு எதுவும் சொல்லாம இப்படியா இருக்கிறது? எனக்கு அதை சொல்றதுக்கு வெக்கமா இருக்காதா ? எப்படி என்கிட்ட இந்த சிவம் இதை எதிர்பார்க்கலாம்? நான் எவ்வளவோ மனுஷங்கள பாத்திருப்பேன். சிவம் ஜென்டில்மேன் . எவ்வளவு பண்பா நடந்து இருக்கலான். டேய் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் டா இனிமே நீ இந்த வண்டியை ஓட்ட வரவரமாட்ட. கடவுளுடைய கிருபை இருந்தா நிச்சயமா நாம மறுபடியும் பார்க்கலாம்
என்று தேங்கி நின்ற கண்ணீரைக் கன்னங்களில் இறக்காமல் அதை உள்ளுக்குள்ளே உறிஞ்சிய படியே வீட்டிற்குள் நுழைந்தாள் சிந்து
இதை எதுவும் எதிர்பார்க்காத சிவம்
“அம்மா இந்தாங்க சாவி. இனிமே நான் வண்டி ஓட்ட வர முடியாது. உங்க பொண்ணுக்கு எப்ப காலேஜ் போகணும்ன்னு சொல்லுங்க. நான் எப்ப வேணாலும் வரேன்”
என்று சொல்லியபடி கார்ச் சாவியை சிந்துவின் அம்மாவின் கையில் திணித்துவிட்டு அந்த வீட்டை விட்டு நகர்ந்தான் சிவம்.
அதுவரை இல்லாத வலி அவனுக்குள் நுழைந்தது. இனிமேல் இந்த வீட்டிற்கு வர முடியாது. சிந்துவை நாம் சந்திக்க முடியாது .இதுதான் கடைசி பயணமா? அதை நினைத்தாலே மனது வலிக்கிறது. இனிமேல் நான் சிந்துவைப் பார்க்க முடியாதா? என்று வீதி வழியே நினைத்துக் கொண்டு வந்தான் சிவம் .
அவன் கண்கள் இரண்டும் நிறைந்திருந்தன. இரண்டு பேரின் இதயத்தில் நாகரீகம் நாற்காலி பாேட்டு அமர்ந்ததால் காதலை இருவரும் சொல்லவில்லை. இருவரும் பயணித்த அந்தக் காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது, இருவரின் காதல்.
#சிறுகதை