செய்திகள்

கடைகளில் 1 மீட்டர் இடைவெளியில் மக்கள் வரிசையாக நின்று வாங்க வேண்டும்

Spread the love

ராமநாதபுரம் மாவட்டத்தில்

அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் கடைகளில் 1 மீட்டர் இடைவெளியில் மக்கள் வரிசையாக நின்று வாங்க வேண்டும்

கலெக்டர் வீர ராகவ ராவ் அறிவுரை

 

ராமநாதபுரம், மார்ச்.26–

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

பிரதமர் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25.3.2020 முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான பால், உணவுப் பொருட்கள், காய்கறிகள், மருந்துப் பொருட்கள் சிரமமின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான கடைகளும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தொடர்பான நிறுவனங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது கூட்டம் கூடாமல் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக நின்று வாங்கிட வேண்டும். அனைத்து கடைகளிலும் பொருட்கள் வாங்க வருகை தரும் பொதுமக்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் கடை நுழைவாயிலில் தண்ணீர், சோப்பு போன்றவற்றை வைத்திட வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் மறு உத்தரவு வரும்வரை அனைத்து தேநீர் கடைகளும் அடைக்கப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பியுள்ள மொத்தம் 455 நபர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் வீடுகளை அடையாளப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் கட்டாயம் வீட்டிலிருந்து வௌியே செல்லக் கூடாது. இதனை தீவிரமாக கண்காணித்திட காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள், தேவிப்பட்டினம் மற்றும் பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 படுக்கைகள் என மொத்தம் 210 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் வேளையில் பொதுமக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தாமாக முன்வந்து முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை மேற்கொள்ள தேவையான வசதிகளை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள தனிப்பிரிவை நேரிடையாகச் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, பரமக்குடி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரிடையாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, பரமக்குடி கோட்டாட்சியர் தங்கவேலு, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் மரு.எம்.அல்லி, சுகாதாரப்பணிகளின் இணை இயக்குநர் மரு.பி.வெங்கடாசலம், காவல்துணை கண்காணிப்பாளர்கள் கே.வெள்ளத்துரை (ராமநாதபுரம்), ரா.சங்கர் (பரமக்குடி) உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *