செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலி: இலங்கை அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்

கொழும்பு, மார்ச் 17–

அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் வெடித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள், ராஜபக்சேவை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி தெருக்களில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இலங்கையின் மிகப்பெரிய கியாஸ் நிறுவனங்களான லிட்ரோ கியாஸ் மற்றும் லாக்ஸ் கியாஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

தினசரி பல மணி நேர மின்வெட்டு

இதற்கிடையே இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே நேற்று டெல்லி வந்தார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள நிதி உதவிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த பசில் ராஜபக்சே, வரும் 30ந் தேதி இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷிரிங்லா மற்றும் பல்வேறு அதிகாரிகளையும் பசில் ராஜபக்சே சந்தித்துப் பேசினார்.

இந்த வருடத்தில் இதுவரை இந்தியா 1.40 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையில் எரிபொருள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.

அரிசி, பால் விலை உயர்வு

போர் காலத்தில் கூட காணப்படாத நிலை தற்போது அங்கு நிலவுகிறது. அரிசி 1 கிலோ இந்திய ரூபாய்க்கு 128 ரூபாயாகவும் ஒரு லிட்டர் பாலின் விலை 75 ரூபாயாகவும் உள்ளது.

பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்றும் உள்ளன. இதன் காரணமாக பல வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சமையல் கியாஸ் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த காரணத்தால், இன்று முதல் சிற்றுண்டி விடுதிகளை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துவிட்டது.

தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச உயர்வு ஆகும்.

டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.260 ஆக சரிந்துள்ள நிலையில் அனைத்துப் பொருட்கள், சேவைகளுக்கான விலைகள் 29 சதவீதம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா, பன்னாட்டு நாணய நிதியம் என்று பல தரப்பிலும் கடன் பெற்று நிலைமையைச் சமாளிக்க முயல்கிறது இலங்கை.

இந்த நிலையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடனடியாக பதவி விலகக் கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.