சிறுகதை

கடிவாளம் – ஷீலா பாலச்சந்திரன்

ரமேஷ்: உமா…. உமா….ஏய் உமா….

புருஷனின் கத்தல் உமாவுக்கு வழக்கமானது தான்…

உமா: ஏங்க… என்னாச்சு ஏன்… இப்படி கத்தறீங்க…

ரமேஷ்: வீட்ல இருந்து ஆபீஸ் வேலையச் செய்யறது எவ்வளவு தலைவலியா இருக்கு தெரியுமா? இதுல உங்கம்மா வேற…

உமா: ஏங்க… எங்கம்மா என்ன பண்ணினாங்க…?

ரமேஷ்: சதா இருமிட்டே இருக்காங்க… சளிய துப்புறது கூட இல்ல… பாத்ரூம் போனா… ச்சே சொல்லறதுக்கே அருவருப்பா இருக்கு…

உமா: என்னங்க இதுக்குப் போய் கோவிச்சுக்கலாமா…?

ரமேஷ்: இங்க பாரு உமா…கொரோனா பிரச்சினை முடிஞ்சு, நான் ஆபிஸ் போற வரைக்கும் உங்கம்மா உன்னோட தம்பி வீட்ல இருக்கட்டும்…அவங்கள பார்க்கவே அருவருப்பா இருக்கு…

நொறுங்கி போனாள் உமா…நல்ல பையன், நல்ல குடும்பம், கைநிறைய சம்பளம்…உமா கழுத்துல மூணு முடிச்சு போட, ரமேஷுக்கு இந்த மூணு தகுதியை மட்டுமே விதவையான பார்வதியால பார்க்க முடிஞ்சுது.

மறுவீட்டுக்கு பொண்ண அழைச்சுட்டு போற நேரம்…

“உமா வேலைக்கு போறதுல எனக்கு இஷ்டமில்ல அத்தை…”

சரி தம்பி…என்றாள் பார்வதி.

இந்த இரண்டு வார்த்தையை தவிர, மருமகனிடம் மாற்று வார்த்தை பேச அறியாதவர் பார்வதி…

இதோ இன்றும்…. அந்த இரண்டு வார்த்தை… பார்வதியிடமிருந்து ஈனசுவரத்தில்…

ரமேஷ்: என்ன உமா…? கல்லு மாதிரி நிற்கிற…பதில் சொல் உமா…

உமா: சரிங்க ஒரு நாள் டைம் கொடுங்க….

ச்சே… என்ன மனுசன்… இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டாரே…

அம்மா மனசு என்ன பாடுபட்டிருக்கும்…?

என்ன புரண்டு படுத்தும் தூக்கம் வந்தபாடில்லை உமாவுக்கு… நீண்டநேர தேடலுக்கு பிறகு கிடைத்த

பதில் சாந்தி.

ஒருவழியாக உமா உறங்கிப் போனாள்…

கடவுளே காலையில சரியா 8 மணிக்கு போன் செய்யறேன்னு சொன்னாளே…

8 மணி ஆகிடுச்சே…. இன்னும் போன் வரலையே…

உமா தவிப்புக்கு காரணம் இல்லாமல் இல்லை…

சாந்தி ரமேஷின் ஒரே தங்கை. சென்னையில் குடித்தனம். ரமேஷின் நேரெதிர் சிந்தனை.

ரமேஷின் ஆணாதிக்க சிந்தனைக்கு கடிவாளமிட்டு காதல் திருணம் செய்து கொண்டவள்.

உமா எதிர்பார்த்து இருப்பது இந்த சாந்தியைத்தான்…

“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்

முருகா….

திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்…”

ரமேஷின் ரிங்டோன்…

உமாவுக்கு உயிர் வந்தது.

ஹலோ சாந்தியா….

சொல்லும்மா…

நல்லா இருக்கியா…

என்ன விசேஷம்…

சாந்தி: ஒன்னும் இல்லண்ணா… உனக்கே தெரியும்… அம்மாவால நடக்க முடியாது… சுகர் பேஷண்ட் வேற… ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் பெட்டுதான்…

அவரு இப்ப வீட்ல இருந்துதான் வேல செய்யுறார்… நிம்மதியா சாப்பிடக்கூட முடியலன்னு பீல் பண்றார்…அருவருப்பா இருக்குங்கிறார்…

அவர் ஆபிஸ் போற வரைக்கும் அம்மாவ உன்னோட வீட்டுல வச்சுக்க முடியுமா?

ரமேஷின் கன்னம் பழுத்தது…

ரமேஷ்: அதுக்கென்ன… என்னோட மாமியார பார்த்துக்க முடிஞ்ச என்னால, என் அம்மாவ பார்த்துக்க முடியாதா…?

எனக்கு இனிமேல் இரண்டு அம்மான்னு நெனச்சுக்கிறேன்…

என்ன உமா நான் சொல்றது சரிதானே… உமாவை பார்த்து கண்சிமிட்டினான் ரமேஷ்…

உமா மானசீகமாக நன்றி சொன்னாள் சாந்திக்கு…

******************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *