செய்திகள்

கடிதம் எழுதி வைத்து திருடிச் சென்ற திருடனுக்கு போலீசார் வலைவீச்சு

Makkal Kural Official

தூத்துக்குடி, ஜூலை 3–

கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிச் சென்ற திருடனை, மெய்ஞானபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் சாத்தான்குளம் ரோட்டை சேர்ந்தவர் சித்திரை செல்வின். இவரும் இவரது மனைவியும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். சென்னையில் ஒரு வங்கியில் மகன் பணியாற்றி வருகிறார். மருமகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 17ஆம் தேதி சித்திரை செல்வின் மனைவியுடன் சென்னை சென்றிருக்கிறார். அப்போது வீட்டை பராமரிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் வீட்டுச் சாவியை கொடுத்துள்ளார். நேற்று மாலை வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த செல்வி, வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடிதம் எழுதிய திருடன்

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கும் சித்திரை செல்வினுக்கும் தகவல் தெரிவித்தார். மெஞ்ஞானபுரம் போலீசார் போனில் சித்திரை செல்வினை தொடர்புகொண்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பண விவரங்களை கேட்டனர்.

பீரோவில் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், ஒன்றரை பவுன் எடை கொண்ட இரண்டு ஜோடி கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் கொள்ளையன் பச்சை நிற மை பேனாவால் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருப்பதையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை, அதனால்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மெஞ்ஞானபுரம் போலீசார் திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *