அந்த உயர்ந்த கட்டுமான அலுவலகத்தின் முன்பு விலை மதிப்புள்ள ஆடைகள் அணிந்து வந்த அந்நிறுவன இயக்குனர்கள் ஆடம்பர கார்களில் வந்து இறங்கினர். ரசனை மிகு வரவேற்புப் பகுதியில் இருந்த லிப்டிற்குள் நுழைந்து மேலே சென்று கொண்டிருந்தனர்.
அதேநேரத்தில் காலை வாகன நெரிசலிடையே ஏனைய சென்னைவாசிகளைப் போலின்றி டிராபிக் சிக்னல்களுக்கு உரிய மரியாதையைத் தந்து மீண்டு வந்த பிறகும் 5 நிமிடங்கள் முன்பே அலுவலகத்தினுள் நுழைந்தான் சந்திரன்.
இயக்குனர்கள் நுழைந்த பாதைக்கு மறுபுறம் லிப்டின் அருகே பெரிய கியூ காத்திருந்தது.
சந்திரன் வழி தனி வழி! படிக்கட்டுப் பாதையில் ரயில் என்ஜின் விடும் டக்டக் சப்தங்களை செய்தபடி தனது ஐந்தாவது மாடிக்கு வந்து சேர்ந்தான்.
இயக்குனர்கள் கூட்டம் முடிந்தது.
பிறகு…
இருக்கையில் அமர்ந்த சந்திரனுக்கு குறிப்பிட்ட இயக்குனரை பார்க்க கட்டளை அலுவலக ஈமெயில் காத்து இருந்தது. அது அவரது செகரட்டரி ராகவியின் உத்தரவு!
அன்றைய தின இயக்குனர்களின் கூட்டம் ஏன்? எதற்கு என்று தெரிந்தவர்கள் இந்த அழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள்.
அப்படி என்ன ஸ்பெஷல் சந்திரனிடம். அவனால் மார்க்கெட்டிங் பிரிவின் மொத்தப் படையையும் சில மணி நேரத்தில் கூடுதல் 5% டார்க்கெட்டை எட்டி பிடிக்க வைத்துவிடும் சாமர்த்தியசாலி!
இயக்குனர் கூட்டத்தின் மையக்கருத்து – சந்திரனைப் போல் மூன்று பேராவது பணியாற்றிட வேண்டும் என்பதே! அந்த இயக்குனருக்கு மூன்று சந்திரனின் வேலைகளைத் தங்களிடம் இருக்கும் ஒரே ஒரு சந்திரனைக் கொண்டு சமாளிக்கவே அந்த அழைப்பு ஈமெயில்.
***
தனது அன்றைய காலைப் பணிகளை உரிய டீம்களுக்கு தந்துவிட்டு தன் கவனத்துக்கு வந்த ரிப்போர்ட்களைப் படித்துவிட்டு அன்றைய இயக்குனர் சந்திப்புக்குத் தயாரானான்.
சரியாக 10.55க்கு அக்கா சுந்தரியிடம் இருந்து அழைப்பு வந்தது.
‘டேய், நாங்க ஒரு நிகழ்வுக்காக திருச்சி போகிறோம். உஷாவை நீ தான் அடுத்த 3 நாட்களுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று அக்கா கூறிவிட்டு தன் தோரணையில்
முடியும் … முடியாது என்ற பதிலுக்கு காத்திராமல் ‘பட்’டென்று மொபைலை அணைத்து விட்டாள்.
உஷாவைப் பார்த்துக் கொள்ள பல மாதங்களாகவே பல்வேறு ஆலோசனைகள் இவனுக்கு தரப்பட்டது.
அதைச் செயல்படுத்த சந்திரன் அந்த நாட்களில் அச்சப்பட்டான். அதுவே இன்று இவன் தலையில்…!
***
மீக்கோ என்று படுசெல்லமாக அழைக்கப்பட்டது அந்த பூனை குட்டி.
குடும்பத்துடன் டெல்லி சென்று குடியேறி விட்ட சோகத்தில் இருந்தாள் . அப்போது தோழி உஷா பெற்றோர் இவளுக்கு இந்த விலை உயர்ந்த பூனைக்குட்டியை பரிசளித்தார்கள்.
இவளும் இதற்கு உஷா உன்று பெயரிட்டு அழைத்து கொஞ்சி விளையாடுவாள்.
ஆனால் குடும்பத்தார் ‘மீக்கோ’ என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டாள் . இது ஒரு வகை ‘பொசசிவ் நோய்’ என்பதால் அக்கட்டளையை யாரும் மீறத் துணியவில்லை.
***
மீக்கோவுடன் அடுத்த மூன்று நாட்கள் எப்படி பொழுதுபோக்குவது என்ற சிந்தனையுடன் மொபைல் போனை மவுனமாக்கினான் சந்திரன்; தன் நடையில் வேகத்தை கூட்டினான்;, போட்டிருந்த டையை மீண்டும் சரி செய்து கொண்டபடி ராகவியிடம் தனது வருகையை பதிவு செய்துவிட்டு எதிரே இருந்த ‘மெதுமெது’ சோபாவில் அமர்ந்தான்.
அந்த ‘குளு குளு’ ஏசி சுகத்துடன் ‘சுடச்சுட’ காபி கிடைக்குமா? என்று ராகவியை உற்று நோக்கினான் ; அவளும் நோக்கினாள்!
இவன் பார்த்தது அவளைத் தான் என்றாலும் அவள் பார்த்துக் கொண்டிருந்ததோ ஏதோ பேப்பர்களைத்தான்.
அதே நேரத்தில் இன்டர்காமில் ஏதோ உத்தரவுகள் பிறப்பித்தபடி யாரிடமோ உரத்த குரலில் ‘செய் அல்லது செத்துமடி’ என்பதற்கு இணையான வார்த்தைகளை கூறியபடி பல்வேறு வேலைகளில் மூழ்கியிருந்தாள்.
நேரம் 12.30யை எட்ட ராகவி மெல்ல சந்திரனிடம், ‘You may go…’ என கூறிக் கொண்டு இருக்க
அந்த மெதுமெது சோபா ஜெட் வேகத்தில் எழ விடாமல் எதிர்சக்தியாக மாற
தள்ளாடியபடி வெளியேறத் துவங்கியபோது,
ராகவி
‘சந்திரன் ‘You can go inside..’ என இவனால் மறக்கமுடியாத புன்னகையை வெளியிட்டு விட்டு மறுபக்கமாக அறைக்குள் செல்ல அபிநயம் பிடித்துக் காட்டினாள்.
***
வெளிய வந்த சந்திரன் 2.15 மணி ஆகிவிட்டாலும் பசி, தாகம் எதைப் பற்றியும் கவலைப்பட வழியின்றி கவலை ‘முடி முதல் அடி’ வரை எதிரொலிக்க தள்ளாடியபடி ராகவியை அணுகினான்.
அவளோ கொண்டுவந்த சாப்பாட்டையும் பழரசத்தையும் சாப்பிட்டு பசி ஏதுமில்லா ஆனந்த நிலையில் எந்த பரபரப்பும் இன்றி கையிலிருந்த ஃபைலை புரட்டிக் கொண்டிருந்தாள்.
ராகவி சொன்னாள் : நாளை இரவு ரயிலில் பயணிக்க டிக்கெட் தயாராகி விட்டதாம்!
அடுத்த 2 நாட்களுக்கு நட்சத்திர ஓட்டலில் அறையும் தயாராம்; அதையெல்லாம் உறுதிசெய்யும் ஈ–மெயிலையும் அனுப்பி விட்டாளாம்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சந்திரன் மனது கேட்டது :
‘உஷாவை என்ன செய்வது?’
டிவி சீரியல் பாணியில் கண்களால் ‘போய்வா மகனே…’ என்பதுபோல் கண்களால் ஆணை பிறப்பித்து அனுப்பி வைத்தாள்.
***
பிறகு ராகவியிடம் இருந்து வந்த அந்த ஈமெயிலை சட்ட வல்லுனரின் கூர்மையான பார்வையுடன் நோட்டமிட்டான்.
இவள் தயார்படுத்தும் டாக்குமெண்டில் படிக்காமல் கையெழுத்து போடுவார் சேர்மன் என்பது புரிந்தவர்களுக்கு புரியும். சந்திரனின் இந்த முயற்சியை பார்த்து வயிறு வலிக்க சிரித்து இருப்பார்கள்.
ஆனால் சந்திரன் திடீரென ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசத்தில் மிளிர்ந்தான்! ‘ஹா’ என கத்திக் குதிக்கத் துவங்கும் நிலை வருமுன்பே இன்டர்காம் சிணுங்க மறுமுனையில் இருந்த விற்பனை மேலாளருடன் விவாதத்தை தொடர்ந்தான்.
***
மறுநாள் பத்து மணிக்கு நேராக ராகவியின் ராஜாங்க பகுதிக்குள் நுழைந்தான். அவளும் ‘என்ன சொல்லு…’ என்பது போல் பார்த்தாள்.
‘நீங்க பூனைக்குட்டியை ரசிக்கும் இளகிய மனதுகாரரா?’ என்று நேரடியாகவே கேட்டான்.
‘ஆமாம், ஏன்?’
‘இல்ல… உங்க முகத்தைப் பார்த்தா அழகிய பூனைகுட்டியின் சாயல்…’ ஏன் தன் அழகை பாராட்டுகிறான் என்று குழம்பினாள் ராகவி.
‘சரி, அதுக்கு என்ன…?’
‘இல்ல. உங்க மெயிலில் ஒரு சில வார்த்தைகளை அடிக்கோடிட்டு இருந்தீர்கள்; அதை உறுதிப்படுத்த வந்து இருக்கேன்’ என்றான்.
பதிலேதும் சொல்லாமல் அவனது தீர்க்கமான கண்களை நேருக்கு நேர் நோக்கினாள்.
அவனும் சற்றும் தயக்கமேதும் இன்றி, ‘வர்த்தக டூர் என்பதால் அதற்கு ஏதாவது உதவி என்றால் நேரில் உங்களிடம் கூறலாம்’ என்று அனுப்பி இருக்கீங்க,
‘ஆகவே ராகவி, I need this help…’ என ஒரு விண்ணப்பத்தை வைத்தான்.
அவளது கண்கள் மீண்டும் ஏதோ பேசியது. அதன் அர்த்தம் நாட்டிய நிபுணர்களுக்கு ஒருவேளை புரிந்து இருக்கும்!
சந்திரன் மெல்ல அவள் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி ‘எனது உஷாவை உன்னிடம் கொடுத்து விட்டு, ரயில் நிலையத்திலிருந்து நேராக உன் இல்லம் வந்து வாங்கி கொள்கிறேன்’ என கூறினான்.
‘Usha Who?’
‘எனது பூனை மீக்கோவின் முழு பெயர்..’ என விளக்கம் தர
அம்மாவிடம் கெஞ்சி, அழுது புலம்பி நடக்காத பூனை வளர்ப்பு படலம் தனக்கு இன்றோ இவன் ரூபத்தில் என்பதால் சில மறுப்பு அபிநயங்களுக்கு பிறகு சரி என்று கூறினாள்.
அதற்கு முந்தைய இரவு சந்திரனை மீக்கோ விளையாட அழைக்க காலில் பிராண்டியும் செல்லமாக கடித்து விளையாடியதையும் மறைக்க போட்டிருந்த கட்டுக்கள் பேண்டால் மறைக்கப்பட்டு இருந்தது!
***
பயணம் ஒரு வழியாக வெற்றிப் பயணமாக மாறிய சந்தோசத்தை ராகவியிடம் வாட்ஸ்அப் மெசேஜ்ஜில் அனுப்பி விட்டான்.
மறுநாள் காலை காபி குடிக்க அவள் வீட்டுக்கு வருவதாக ஒரு தகவலை சில ஸ்மைலிகளுடன் குறும்புத்தனமாக அனுப்ப ‘Poison’ என்ற கார்ட்டூன் படத்துடன் Please come என்ற வாசகமும் பதிலாக வந்தது!
***
அதிகாலை 4:30 மணிக்கே ரெயில் நிலையம் வந்த சந்திரனும் ‘ஊபரில்’ முதலில் ராகவி வீடு, பிறகு தன் இல்லம் என பதிவு செய்துவிட்டு அவளுக்கும் தகவல் தந்து நேராக அவள் வீட்டில் நுழைந்தான்.
புறப்பட்டுச் செல்ல மீக்கோ தயாராகவே இருந்தது.
‘இது என் அம்மா…’ என கூறியபடி கையை நீட்டியபோது விரல் முனையில் வெள்ளை கிரீம், அம்மா கை கூப்பி வரவேற்றார். கைகளில், மணிகட்டில் என பல்வேறு பகுதிகளில் பிளாஸ்திரி, கிரீம் தடவப்பட்டு இருந்ததைக் கண்டான்.
காரில் ஏற வந்த சந்திரனுக்கு அதிர்ச்சி, ‘சார் நான் பூனை, நாய் எல்லாம் ஏத்த மாட்டேன்..’ அடுத்து வரும் பயணிக்கு அது அலர்ஜி வந்து எதையாவது செய்து விடக்கூடாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டு, சவாரியை முடித்து கொண்டு இவர்களுடனான உறவை முறித்து விட்ட சந்தோஷத்தில் உடனே புறப்பட்டு சென்றுவிட்டான்.
‘கூடையில் பூனை, இழுத்துச் செல்லும் வசதி கொண்ட சூட்கேசையும் வைத்துக்கொண்டு நிராயுதபாணியாய் அந்த அதிகாலையில் திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
மெல்ல அருகே வந்த ராகவி, ‘என்ன மிஸ்டர் காபி கொடுத்தா தான் கிளம்புவியா…?’ எனக் கேட்டபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்; காப்பியை இவன் கையில் கொடுத்துவிட்டு முக்கால் நீள ஸ்கர்ட்டையும் மேட்சிங்காக ஒரு டி–சர்ட்டையும் அணிந்தபடி ‘வா என் காரில் போகலாம் என்று அழைத்தாள்.
அவள் கால் பாதங்களிலும் மீக்கோவின் கை வண்ணம்!
‘அட இத்தனை துன்பங்களையும் தந்த பிறகும் என் வீட்டுக்கு வர சம்மதித்ததில் அன்பின் வெளிப்பாடு இருப்பதை புரிந்து கொள்ள மீக்கோவிற்கு சில நிமிடங்கள்தான் ஆனது.
ஆனால் சந்திரனுக்கோ சில நாட்கள் ஆனது.