தமிழ்ப்புத்தாண்டில் பக்தர்களுக்கு அருளாசி
சென்னை, ஏப் 15–
சென்னை வேளச்சேரியில் உள்ள அவதூத தத்த பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் ‘விஸ்வாவசு’ தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ‘‘அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் விஸ்வாவசு, பெயரே மிக நன்றாக அமைந்துள்ளது. மக்களுக்கு மிக நல்ல ஆண்டாக அமையும். இறைவன் தான் அனைத்துக்கும் காரணம், மானசீகமான தெய்வீகமான சமாதானத்துக்கு கோயில்கள் வேண்டும். இறை சேவை என்பதே மனிதருக்கு தானம் செய்வது தான், படிப்பு தேவைப்படுபவர்களுக்கு, படிப்பு தானம், பசியில் இருப்பவர்களுக்கு அன்ன தானம் என செய்வது தான், கடவுளை வழிபடும் இறை சேவையாகும். இதைத்தான் நாங்கள் எங்கள் மடத்தில், ஆசிரமத்தில் சொல்லித் தருகிறோம்.
நடுத்தர மக்களுக்கான ஆசிரமம் இது. இங்கு சின்னச் சின்ன வியாபாரிகள், தொழிலாளிகள் தான் இருக்கிறார்கள். நிஜமான பக்தர்கள் தான் எங்கள் ஆசிரமத்தின் பலம். இங்கு வந்து போனவர்கள் அவர்களுக்கு நடந்த நல்லதை தொடர்ந்து, அவர்களே இங்கு மீண்டும் வந்து நல்லது செய்கிறார்கள் தானம் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் எல்லாமே இருக்கிறது. எல்லாவிதமான புராணங்கள், பகவத்கீதம், எல்லாமே இங்கு தமிழ்நாடு வந்தால் பார்க்க முடியும். தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள், பக்தி வழிபாடு மாதிரி இந்தியாவில் எங்குமே இல்லை. பகவான் வேண்டுமா? பகவான் வேண்டாமா? சும்மா இருக்க வேண்டுமா அனைத்தும் இங்கு இருக்கிறது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள், ஆனால் அடுத்தவருக்கு தீங்கு செய்யாமல் இருங்கள்.
அன்பாக இருங்கள். எல்லாருக்கும் எல்லாமும் இந்த புத்தாண்டில் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்’’.
இவ்வாறு அவர் அருளாசி கூறினார்.