சிறுகதை

கடவுளாய் மாறுங்கள் | தருமபுரி சி.சுரேஷ்

மொபைல்கள் எல்லாம் வீடுகள் தோறும் அவசியம் என்றாகி விட்டது.

அப்பாவிற்கு கூகுள் பேயில் பணம் அனுப்ப கரண்ட் பில் கட்ட ஆன்லைனில் பள்ளிப் பாடம் படிக்க கேம்ஸ் விளையாட சிறியோர் முதல் பெரியோர் வரை யாவருக்கும் மொபைல் அவசியமாகிவிட்டது.

மொபைலுக்குள்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது . மொபைல் இல்லாத மனிதனை இந்த உலகம் வேற்று கிரக வாசியாகப் பார்க்கிறது

இந்தநிலையில் ரவிக்கு இரண்டு பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஒருத்தி பத்தாம் வகுப்பு படிக்கிறாள் . இன்னொருவன் ஏழாம் வகுப்பு படிக்கிறான்.

இருவருக்குமே ஆன்லைன் கிளாஸ் நடக்கிறது. வீட்டில் இருப்பது ஒரு ஆண்ட்ராய்டு மொபைல். யாருக்கு அதை கொடுப்பது.

லாக்டோன் காலத்தில் கையில் பணம் இல்லை. இன்னொரு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்க என்ன செய்வது.

ரவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறான். பாதி சம்பளம்தான் இந்த மாதம் வந்தது.

குடும்பம் நடத்தவே அந்த பணம் போதுமானதாக இல்லை. அப்படி இருக்க எப்படி மொபைல் வாங்குவது இரண்டு பிள்ளைகளும் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். ஆன்லைனில் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் எனும் ரீதியில் பீஸ் வாங்குவதில் அந்த பள்ளிகள் கில்லாடிகளாக இருந்தன.

ரவி குறித்து அந்தப் பள்ளிக்கு என்ன அக்கறை இருக்கிறது. தலையை எங்காவது அடமானம் வைத்தாவது பீஸ் கட்ட சொல்லுகிறார்கள் பண முதலைகள்.

கறாரான பள்ளி அது என்ன செய்ய. பள்ளியில் பீஸ் கட்ட வேண்டும் ; மொபைல் வாங்க வேண்டும்; வீட்டினுடைய சகல தேவைகளையும் சந்திக்க வேண்டும்.

லாக்டௌன் காலத்தில் இப்படி ஆயிரம் பிரச்சனைகள் மனதிற்குள் வந்து நின்றது. தெரிந்த எல்லோரிடமும் கடன்வாங்கி இதுவரை காலத்தை ஒட்டி ஆகிவிட்டது.

இனி என்ன செய்வது என்று தெரியாமல் ரவி குழப்பத்தில் இருந்தான்.

அவனுடைய மகள் பத்தாம் வகுப்பு படிப்பதால் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் செய்ய ரவியின் மொபைல் பயன்படுத்திக் கொண்டு இருந்தாள்.

இப்பொழுது மகனுக்கு ஒரு மொபைல் தேவையாயிருந்தது. ரவியின் நண்பன் கண்ணன் அந்தத் தெருவில் மொபைல் கடை வைத்திருக்கிறான். ரவியின் நிலையை அறிந்து “ரவி கவலைப்படாத; எங்கிட்ட இருக்குற ஒரு பழைய மொபைல் உனக்கு தரேன். அதை தம்பிக்கு யூஸ் பண்ணிக்கோ. நீயே வச்சுக்கோ பணம் எதுவும் தராத” என்றான்.

கிராமத்தில் இருக்கும் அக்காவும் மாமாவும் விவசாயம் செய்கிறவர்களாக இருந்ததால் அங்கிருந்து ஒரு மூட்டை அரிசியை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த நேரத்தில் உதவின நண்பனையும் உடன்பிறந்த அக்காவையும் அவனால் எப்படி மறக்க முடியும்

ரவி அவர்களுக்கு இதுவரை ஒன்றும் செய்ததில்லை. ஆனாலும் அவர்கள் இரக்கம் உள்ளவர்களாய் கரிசனை உள்ளவர்களாய் உதவி செய்தார்கள்.

ரவி இதுவரை கடவுளை பார்த்ததில்லை. இப்படி உதவும் உள்ளங்களில் கடவுளை கண்டான்.

பணம் வைத்திருப்பவர்கள் உள்ளங்களில் எல்லாம் கடவுள் இல்லை. அந்த பணத்தை தனக்காக மட்டும் அல்லாமல் தேவையுள்ள மக்களுக்கு கொடுத்து உதவுபவர்கள் உள்ளத்திலே கடவுள் இருக்கிறார்.

அக்காவும் மாமாவும் அனுப்பிய ஒரு மூட்டை அரிசியில் கொஞ்சம் எடுத்துச் சென்று நண்பனுக்கு கொடுத்தான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

அதனால்தானோ என்னவோ அறிஞர் அண்ணா “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்று சொல்லியிருக்கிறார் . அப்படி என்றால் ஏழைகளை சிரிக்க வைக்கிறவர்களும் கடவுள் தானே. நானும்தான்.

இந்த நாட்களில் மனிதர்களே கடவுள்களாக மாறுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவுங்கள் என மனதிற்குள்ளேயே ரவி பேசிக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *