ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் எல்லாம் கண்ணை மட்டுமல்ல கருத்தையே கவரும் வண்ணம் இருந்தன. வண்ணங்களைக் குழைத்து வானவில்லை வளைத்து எண்ணங்களால் தீட்டப்பட்ட உயிர் ஓவியங்களை குவியல் குவியலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். அதில் திருதராஷ்டிரனும் ஒருவன். அவனுடன் அவன் மனைவி, பையன் இருந்தனர்.
“அப்பா இந்த படத்த பாருங்க. கலர் எப்படி தெரியுது?
என்று மகன் ரூபன் கேட்க
“நல்லா தெரியுதுப்பா சிகப்பு கலர் தானே அது?
என்று திருதராஷ்டிரன் சொல்ல
” இல்லயப்பா அது மஞ்சள் கலர்
“சரி இத பாருங்க. இது எப்படி இருக்கு ? இந்தக் கலர் என்னன்னு சொல்லுங்க”
என்று திருதராஷ்டிரனிடம் மனைவி கேட்க
“இது பச்சை பக்கத்துல கருப்பு சரிதானா நான் சொல்றது? “
என்று வெள்ளந்தியாகத் திருதராஷ்டிரன் சொல்ல
” இல்ல இது மஞ்சள்; இது நீலம்”
என்று எதிர் பதில் சொன்னாள் மனைவி.
“அப்பா இதையாவது பாருங்க. இந்த கலர் உங்களுக்கு எப்படி தெரியுது ?
என்று மகன் கேட்க
“இது ஆரஞ்சு கலர். பக்கத்துல ஊதா கலர் “
என்று திருதராஷ்டிரன் சொல்ல
” இல்லப்பா ரெண்டுமே தப்பு “
என்று ரூபன் சொல்ல
அந்த ஓவியக் கண்காட்சியில் ஓவியங்களைப் பார்த்து பேசிக்கொண்டு இருந்த மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
“என்ன இது அவருக்கென்ன நல்லாத்தானே கண்ணு தெரியுது. பெறகு எதுக்கு எல்லாரும் கலர் பத்தி கேக்குறாங்க. அவரும் தப்பாவே தான் சொல்றாரு. வித்தியாசமான மனிதரா இருப்பாரோ ? அவருக்கு கண்ல ஏதும் பிரச்சனையா ? “
என்று திருதராஷ்டிரன் குடும்பத்தைப் பார்த்து அங்கு வந்திருந்தவர்கள் கேட்க
” இல்லைங்க அவருக்கு ஒரு வினோதமான நோய் இருக்குது . நோயின்னு சொல்றத விட ஒரு மனுஷன் ரொம்ப நாளா ஏதோ சிந்திச்சிட்டு இருந்தா நாம அதுவாகவே ஆயிருவோம். அது மாதிரி தான் திருதராஷ்டிரனுக்கு அவருடைய கண் பார்வை அத்தனையும் ஒரே கலரா தான் தெரியுது .வேற எந்த கலரையும் அவரோட கண்கள் பிரித்துக் பார்ப்பதில்ல. உதாரணமா நாய்களாேட கண்ணுக்கு எல்லாமே கருப்பு வெள்ளையா தான் தெரியும்ங்கிற மாதிரி; இவருடைய கண்ணுக்கு எல்லாமே ஒரே மாதிரி கலரா தான் இருக்குன்னு அவரே சொல்றாரு. அத வித்தியாசப்படுத்தி பாக்கத் தான் அவங்க குடும்பம் இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்து அவர் கண் பார்வையை டெ ஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா அவரு சொல்றது எல்லாமே தவறாத் தான் இருக்கு “
என்று திருதராஷ்டிரனை பற்றி ஒருவர் சொல்ல
அப்போது
“அப்பா இதையாவது பாருங்க. இந்த கலர் சரியா இருக்கா சொல்லுங்க”
என்று ரூபன் கேட்க
“இது கடல். இது கடலுக்கு மேல் இருக்கிற வானம் . இது ப்ளூ இது கடல் ப்ளூ . இது கடல் நீலம்”
என்று சொன்னார் திருதராஷ்டிரன்.
“ஓ “வென்று அழுதபடி திருதரஷ்டிரனைக் கட்டிப்பிடித்து அழுதனர் மனைவியும் மகன் ரூபனும்.
“எதுக்காக இவர் இப்படி அழுதுக்கிட்டு இருக்காரு “
என்று அங்கு இருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட
” இந்த கலர் மட்டும் இவருக்கு அவ்வளவு கரெக்டா தெரியுது எந்த கலரும் அவருக்கு தெரிய மாட்டேங்குது . ஆனா இது மட்டும் சரியாத் தெரியுதே “
என்று தலையில் அடித்து அடித்து அமுதாள் மனைவி.
“மகாபாரதத்தில திருதராஷ்டிரனுக்கு கண்ணு தெரியாது. எனக்கு இந்த ஒரு கலராவது தெரியுதேன்னு சந்தோஷப்படு ” என்று மனைவியை தேற்றினார் திருதராஷ்டிரன்.
“அப்படி எல்லாம் சொல்லாதீங்க. இது ரொம்ப தப்பான வார்த்தையா இருக்கு. .உங்களுக்கு ஒரு கலர் தான் தெரியுதுங்கிறது . உங்க குடும்பத்தில இருக்கிறவங்களுக்கு எவ்வளவு பிரச்சினை ” என்று ஓவியக் கண்காட்சியில் இருந்த ஒருவர் சொல்ல
“தப்பு தான் சார். என் குடும்பத்த விட்டுட்டு கடல் கப்பல்னு வருஷக்கணக்கா இருந்தேன். அந்த கடலுடைய கலரும் வானத்துடைய கலரும் மட்டும் தான் என் கண்ணில அப்பி நின்னுச்சு . அதையே பாத்து பாத்து மத்த கலர் எதுவுமே என் கண்ணுக்கு தெரியாம பாேச்சு. அதனாலதான் இந்த ஓவியக் கண்காட்சிக்க கூட்டிட்டு வந்து என்னுடைய கண்ணையும் எனக்கு தெரிகிற வண்ணத்தையும் பரிசோதனை பண்ணி பாக்குறாங்க . என் மனைவியும் என் மகனும் . எல்லாத்திலயும் நான் தோத்துட்டேன். என் கண்ணுக்கு தெரியறது எல்லாமே அந்தக் கடல் கலர்
மட்டும்தான் ” என்று திருதராஷ்டிரன் சொன்னபோது
“அப்பா இந்த கலர் என்ன்னு சொல்லுங்க “என்று ரூபன் கேட்க
” இது கடல் நீலம். இது கப்பல், இது வானத்தின் நீலமென்று “
சொன்னார் திருதராஷ்டிரன்
” அப்பாவுக்கு இந்தக் கலர் மட்டும்தான் தெரியுது” என்று மறுபடியும் தன் அப்பாவின் கண் பார்வையைச் சோதனை செய்தான் ரூபன்.
“என்னாேட பார்வை கடல் மாதிரி விரிஞ்சிருக்கு. வானம் மாதிரி நிறைஞ்சிருக்கு. அவ்வளவுதான். எனக்கு எந்தக் கலரும் முக்கியம் இல்ல. எனக்கு கடலும் கடல் சார்ந்த இடமும் வானமும் வானம் சார்ந்த இடமும் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுதுன்னா நான் வாழ வேண்டிய இடம் இந்த பூமி இல்ல. கடல் “
என்று மனைவியையும் மகன் ரூபனையும் விட்டு விட்டு கடலை நாேக்கி நடையைக் கட்டினார் திருதராஷ்டிரன்.
‘‘உங்களுக்கு கலர் பிளைண்ட் . கண் டாக்டரைப் பாருங்க ’’ என்றார் பக்கத்திலிருந்தவர்.
அப்பாவின் கண் பார்வையைச் சோதனை செய்து சரிசெய்ய கண் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு ஓடினான் மகன் .