நாடும் நடப்பும்

கடல்சார் சவால்களை சந்திக்க அதிநவீன கருவிகள்


ஆர். முத்துகுமார்


நமது தேசம் ஒரு தீபகற்பம் : அதாவது மூன்று பக்கமும் கடல் நீர் சூழ இருக்கும் ஓரு நிலப்பரப்பாகும். இது இயற்கையாக நமக்குக் கிடைத்திருக்கும் பாதுகாப்பு அரணாகவே கருதினோம்!

ஆனால் கடல் கொந்தளிப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற கணக்கில் நம் நகரத்தை கடல் நீர் தாக்குவது அதிகரித்து வருவதை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டோம்.

2004ல் தமிழகம் கடற்கரைப் பகுதியில் சுனாமி ஏற்படுத்திய சேதத்தை இன்று வரை மறக்க முடியாமல் தவிக்கிறோம். பிறகு சென்னை 2015ல் சந்தித்த அதீத மழையால் நகரமே நீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.

கடந்த 4 ஆண்டுகளாக கேரளாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் காட்டாற்று வெள்ளமாய் புயல் மழை பொழிவு தொடர்கிறது.

மும்பையில் ஜூன், ஜூலை மாதங்களில் நகரமே ஸ்தம்பித்து விடுவதை அறிவோம் : காரணம் மழையும் அதனால் நீர் தேங்குவதும் தான்.

இது போன்ற இயற்கைச் சீற்றத்தை தீவிரமாக கண்காணிக்கும் புவியியல் நிபுணர்கள் நாம் வரும் முன் காக்கும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

அது மட்டுமா? கடல் எல்லைகளின் வழியாக ஊடுருவி நாட்டில் யுத்த காட்சிகளையும் அரங்கேற்றி விட முடியும்! அதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய மும்பைத் தாக்குதல்கள் சான்றாகும்.

மொத்தத்தில் நம் அன்றாட வாழ்வில் பெரும் சேதத்தை விளைவிக்கும் தன்மை கடல்புறத்திற்கு இருக்கிறது. அதிலும் தீபகற்ப நாடான நாம் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்நிலையில் தான் ஐ.நா.வின் கடல் சட்டதிட்டங்களை மீறி சில நாடுகள் பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றன” என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனாவை மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

மத்திய பாதுகாப்பு துறை 15 பி என்ற பெயரில் 4 அதிநவீன போர் கப்பல்களை உள் நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதல் அதிநவீன போர்க் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.

இதையடுத்து 7,400 டன் எடையுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விசாகப்பட்டினம் போர் கப்பல் நேற்று கப்பற்படையில் இணைக்கப்பட்டது.

இந்தப் போர்க் கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் அமைச்சர் பேசும்போது குறிப்பிடுகையில் தென் சீனக் கடல் பகுதியில் சர்வதேச நாடுகளின் கப்பல் போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த கடல் பகுதியில் எரிவாயு, எண்ணெய் வளங்கள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் தென் சீனக் கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அத்துடன் பல்வேறு சிறு சிறு கட்டுமானங்களையும் சீனா செய்து வருகிறது.

இதற்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற நாடுகளும் தென் சீனக் கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடுகின்றன.

தற்போது கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள ‘ ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பலில் ’ ஏராளமான ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் ராக்கெட்டுகள், ரேடார்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்பட போர்க்காலச் சூழ்நிலையின் போது தேவைப்படும் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இக்கப்பலில் சூப்பர்சானிக் சென்சார்கள் வசதியும் உள்ளது.

இது போன்ற நவீன சூப்பர்சானிக் சென்சார்களின் உதவியால் நமது பருவநிலை மாற்றங்களையும் மிகத் துல்லியமாக தெரிந்து கொண்டு வரும் கால பருவநிலை மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் முடியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *