செய்திகள்

கடலூர், விழுப்புரம், பண்ருட்டியில் 19.5 செ.மீ. மழை; மக்கள் தவிப்பு

நள்ளிரவு முதல் காலை 8.30 மணி வரை

கடலூர், விழுப்புரம், பண்ருட்டியில் 19.5 செ.மீ. மழை; மக்கள் தவிப்பு

கடலூர், பிப். 21

சென்னை வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 8.30 மணி வரை 19.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் கனமழை தொடர்ந்தது.

இப்பகுதிகள் வெள்ளக்காடானது. இதனால் பொதுமக்கள் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளானார்கள். வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பாண்டிச்சேரியிலும் 19.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில், கடலூரில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

கடலூரில் பெய்த கன மழையால் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், கம்மியம்பேட்டை, காமராஜ் நகர், கடலூர் முதுநகர், சரவணா நகர், சூரியா நகர், கே.என்.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கூத்தபாக்கம் பகுதியில் கடலூர் பண்ருட்டி மெயின் ரோட்டில் வெள்ளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

நெற்பயிர்கள் வீணானது

மேலும் விவசாயிகள் அறுவடை காலம் என்பதால் தாங்கள் அறுவடை செய்த நெற்பயிர்கள் திடீர் மழையில் நனைந்து வீணாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. சாலைகளில் வெள்ளத் தண்ணீர் பெருக்கெடுத்தது.

வானிலை அறிக்கை

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், புதுச்சேரியில் தலா 19 செ.மீ., மழையும், மணிமுத்தாறு, குறிஞ்சிப்பாடியில் தலா 10 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 1 முதல் 9 ம் வகுப்புகளுக்கு மட்டும் நாளை (திங்கள்) ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் மைக்கேல் பென்னோ அறிவித்துள்ளார்.

அடித்துச் செல்லப்பட்ட பெண்

ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த ஒரு இளம் பெண் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் கால்வாயில் விழுந்து இருப்பதாக வந்த ஒரு தகவலை அடுத்து தீயணைக்கும் படை வீரர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்

புதுச்சேரியிலும் 19.5 மழை:

வெள்ளப் பகுதிகளில் கவர்னர் பார்வை

புதுச்சேரியில் காலாப்பேட்டை, கனகசெட்டிகுளம், வில்லியனூர், மதகடிப்பட்டு பாவனாநகர், நடேசன் நகர், வெ்கடா நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பம்ப் கொண்டு தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளம் பாதித்திருக்கும் தாழ்வான பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளை மாநிலத்தின் கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றிருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜன் நேரில் போய் பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *