கடலூர், மார்ச் 2–
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை வாகனத்தினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கடலூர் மாவட்டத்தில் தேசிய விலங்குகள் நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் 6 நடமாடும் கால்நடை கால்நடை மருத்துவ ஊர்தி செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மேலும் 2 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி பண்ருட்டி மற்றும் மங்களூர் ஒன்றியங்களுக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராம புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், “2ம் வெண்மை புரட்சியை” ஏற்படுத்திடவும் முக்கிய காரணியாக இருக்கும்.
கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலை தூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனங்கள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளவும், பிற்பகலில் கால்சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மேற்கொள்ளவும் உள்ளது.
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியில் சிறு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் அறுவை சிகிச்சை உபகரணங்கள், ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய நுண்ணோக்கி தடுப்பூசிகளை முறையாக பராமரிக்க குளிர்சாதனப்பெட்டி, சினை ஊசிகளை பராமரிக்க திரவ நைட்ரஜன் குடுவை, மலடு நீக்க சிகிச்சை மருந்துகள், ஆண்மை நீக்கம் உபகரணங்கள், பாம்பு கடி எதிர்வினை மருந்துகள், கால்நடை மருந்துகள், குடற்புழு நீக்க மருந்துகள் போன்ற கால்நடை மருந்தகத்தில் இருக்கும் அத்தனை வசதிகளுடனும் கால்நடை நடமாடும் மருத்துவ ஊர்தி செயல்பட உள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தர வேண்டும். தகவல் பெறும்பட்சத்தில் வீடுதேடி வந்து கால்நடைகளுக்கு சிகிக்சை வழங்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் வேங்கட லட்சுமி, உதவி மருத்துவர் மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.