செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கி கடன்

கடலூர், பிப். 21

கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கி கடன் உதவிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வழங்கினார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான வங்கி கடன் இணைப்பு தொடர்பாக மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை) ஹன்ஸ்ராஜ் வர்மா ,தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் சுய உதவிக் குழுக்கள் வங்கி கடன் இணைப்பு ரூ.14 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை ரூ.17 ஆயிரத்து 500 கோடி இலக்கீடு எய்தப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்கள் கடனை முழுமையாக திரும்பி செலுத்தி வருவதால் அதிக அளவில் தொடர்ச்சியாக வங்கி கடன் இணைப்பினை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிட வங்கியாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், வங்கி கடன் பெறும் சுய உதவிக் குழுக்கள் கடனை திரும்ப முறையாக செலுத்துவதற்கு ஒவ்வொரு வங்கி கிளை மேலாளர்கள் தலைமையில் கடனை திரும்ப செலுத்தும் குழுவானது சமுதாய அமைப்புகளின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்கள் ஏற்கனவே வாங்கிய வங்கி கடன் நிலுவைகளை வசூலிக்க, கடன் வசூலிப்பு முகாம் தொடர்ச்சியாக மகளிர் திட்ட அலுவலர்களுடன் இணைந்து நடத்திட வங்கியாளர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். வங்கியாளர்களுக்கு இதர கடன் இணைப்புகளை விட சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிடும் கடனானது முறையாக திரும்ப செலுத்துவதால் லாபகரமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கூடுதல் இயக்குநர் கணேஷ் கண்ணா, முதுநிலை ஆலோசகர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு வங்கி கடன் இணைப்பு பற்றியும், கடன் திரும்ப செலுத்திடும் முறைகள் பற்றியும் விளக்கி கூறினர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பு.காஞ்சனாஅவர்கள், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் திட்ட இயக்குநர்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள், முன்னோடி வங்கி மேலாளரகள், மண்டல அளவிலான அனைத்து வங்கி மேலராளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *