கடலூர், மார்ச் 6–
கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில், அந்த பட்டாசு ஆலையின் உரிமையாளரான கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிவனார்புரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், தனியார் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று மாலை அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த 10 பேர் பணியாற்றினர். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்த மல்லிகா (வயது 60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து கடலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து 9 பேரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேர் 80 சதவீத தீக்காயங்களுடன் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். ரெட்டிசாவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
2 பேர் கைது
இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு ரூ. 50,000 வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், இவ்விபத்தில் தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமதி (வயது 45), பிருந்தாதேவி (வயது 35), லட்சுமி (வயது 24), செவ்வந்தி (வயது 19) மற்றும் அம்பிகா (வயது 18) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கோர விபத்து நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களான சேகர் (வயது 55), கோசலா (வயது 50) ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.