போஸ்டர் செய்தி

கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் ரூ.30 கோடி செலவில் மருத்துவமனை கட்டிடங்கள்: எடப்பாடி திறந்தார்

Spread the love

சென்னை, ஜூன்.25–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (24–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில், கடலூர் மாவட்டம், கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையக் கட்டடத்தை காணொலிக்காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாகத் திறந்துவைத்தார்.

மேலும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் 12 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.

ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்குதடையின்றி கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நவீன மருத்துவக் கருவிகள் நிறுவுதல், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவித்தல், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகளிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல், மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி உயர்தர மருத்துவ வசதிகள் அளித்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், கடலூர் மாவட்டம், கடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையக் கட்டடம்; கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 58 படுக்கைகள் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கான கட்டடம்;

வெம்பாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம்,வெம்பாக்கம் அரசுமருத்துவமனையில் 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 54 படுக்கைகள் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, பிரசவ பிரிவு பேறுகால பின் கவனிப்புபிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கண் மருத்துவபிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகியவற்றிற்கான கட்டடம்;

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 படுக்கைகள் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு, பிரசவ பிரிவு, பேறுகால பின் கவனிப்பு பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிப்பு பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகியவற்றிற்கான கட்டடம்;

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம் – காயாமொழி மற்றும் புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் –கொம்மனந்தல் ஆகிய மூன்று மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்;

அனுமன்தீர்த்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம் – அனுமன்தீர்த்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்; திருவண்ணாமலை மாவட்டம் – கொழப்பலூர், பெரம்பலூர் மாவட்டம் – இலப்பைக் குடிகாடு, திருநெல்வேலி மாவட்டம் – வாசுதேவநல்லூர், விழுப்புரம் மாவட்டம் – காணை மற்றும் விருதுநகர் மாவட்டம் – ம.ரெட்டியபட்டி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடங்கள்;

என மொத்தம், 30 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இந்த ஆண்டு முதல் உணவு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அளவுகோல்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகள் குறித்து மாநில உணவு பாதுகாப்பு பொருளடக்க அட்டவணையை வெளியிட்டுள்ளது. மனிதவளம் மற்றும் நிலையங்கள் விவரம், இணக்கம், உணவு பரிசோதனை உட்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு,பயிற்சி மற்றும் திறன் வளர்த்தல், பயனீட்டாளர்கள் அதிகாரம் ஆகிய ஐந்து முக்கிய அளவுகோல்களின் செயல்பாடுகளை இந்த உணவு பாதுகாப்பு அட்டவணை மதிப்பீடு செய்கிறது.

மதிப்பீடு அறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு பாதுகாப்பு நாளன்று மதிப்பீடு அறிக்கை வெளியிடப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, உணவு பாதுகாப்பு அட்டவணை மதிப்பீட்டில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட இவ்விருதினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்

டாக்டர் சி. விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத் துறைஅமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமத், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின்ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஜி. மோகனன், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து இயக்குனர் கே. குழந்தைசாமி, உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் வனஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *