கடலூர், மே 15–
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் திடீரென வெடித்து சிதறி அருகே உள்ள வீடுகளுக்கு ரசாயன நீர் புகுந்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் சிப்காட் தொழில் பேட்டையில் குடிகாடு கிராமம் அருகே தனியார் சாயப்பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் அதிக வெப்பத்தினால் திடீரென வெடித்து சிதறியது. இதனால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்தது. ரசாயன கழிவு நீர் புகுந்ததில் சில வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து உள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த ரசாயன நீரால் கண்எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் யாரும் வராததால் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடலூர் -சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த கடலூர் வட்டாட்சியர் மகேஷ் மற்றும் காவல் துறையினரை சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.