கடலூர், டிச. 16:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டத்தில் 157 மீனவ பயனாளிகளுக்கு தலா 2 எண்ணம் வீதம் 314 எண்ணங்கள் ரூ.7,76,208 மதிப்பீட்டிலான உயிர் காப்பு சட்டைகள் வழங்கும் பணியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
2023–-24ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் சட்டமன்ற பேரவையில், தமிழ்நாட்டிலுள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு மானிய விலையில் உயிர்காப்பு சட்டைகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழகத்திலுள்ள 10,000 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் படகு ஒன்றிற்கு அதிகபட்சம் 04 எண்ணம் வீதம் மொத்தம் 40.000 உயிர்காப்பு சட்டைகள் ரூ 4.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்திற்கு 619 உயிர்காப்பு சட்டைகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. மீனவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு உயிர்காப்பு சட்டையின் அலகு விலை ரூ.2472/- என நிர்ணயம் செய்யப்பட்டது. நிர்ணயம் செய்யப்பட்ட உயிர் காப்பு சட்டையின் அரசின் இலக்கில் 75% அரசின் பங்குத் தொகையில் ரூ.1854/- எனவும் தகுதியான நாட்டுப்படகு மீனவர்களிடமிருந்து உயிர்காப்பு சட்டைகளின் அலகு விலையில் 25 சதவீதம் பயனாளி பங்குத் தொகை ரூ.618/-வீதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மூலம் மானிய விலையில் உயிர்காப்பு சட்டைகள் பெறப்பட்டு முதற்கட்டமாக 107 மீனவ பயனாளிகளுக்கு உயிர் காப்பு சட்டைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக ரூ.7,76,208 மதிப்பில் 157 மீனவ பயனாளிகளுக்கு தலா 2 எண்ணம் வீதம் 314 எண்ணங்கள் உயிர் காப்பு சட்டைகள் வழங்கும் பணி துவங்கி வைக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, மீனவளத்துறை உதவி இயக்குநர் நித்திய பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





