இந்திய கடற்படை அசத்தல்
புதுடெல்லி, மே 6–
கடலுக்கு அடியில் பயன்படுத்தக்கூடிய கண்ணிவெடியை வெற்றிகரமாக இந்திய கடற்படை சோதனை செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படை போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை தங்கள் ஆயுத சோதனையில் தீவிரம் காட்டியுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஒ. மற்றும் இந்திய கடற்படை இணைந்து தயாரித்த எம்.ஐ.ஜி.எம். என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டை சோதனை செய்து அதில் வெற்றி கண்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. எம்.ஐ.ஜி.எம். ஆயுதமானது குறைந்த அளவிலான வெடிபொருள் கொண்டு கடலுக்கு அடியில் சோதனை செய்யப்பட்டது. எம்.ஐ.ஜி.எம். என்பது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி போன்றது. இது எதிரி நாட்டு அதிநவீன போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் போன்றவற்றை குறிவைத்து தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிகரமான சோதனைக்கு பிறகு எம்.ஐ.ஜி.எம். இந்திய கடற்படையில் சேர்க்க தயாராக உள்ளது என்பதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டி.ஆர்.டி.ஒ.வின் தலைவருமான டாக்டர் சமீர் காமத் தெரிவித்துள்ளார்.