செய்திகள்

கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி: 28 மின்சார ரெயில்கள் ரத்து

Makkal Kural Official

சென்னை, நவ.22-

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் இருமார்க்கமாகவும் 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை குறைத்து வாரநாட்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இருமார்க்கமாகவும் 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, தண்டவாளம் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்களும், தாம்பரம் – கடற்கரை இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்களும் என மொத்தம் 28 மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி கடற்கரையில் இருந்து காலை 6.52, 7.33, 8.43, 9.40, 11.30, 11.41 மதியம் 12.30, 12.50 மாலை 3.15, 4.25, 5.43, 6.35 இரவு 7.57, 8.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து காலை 5.12, 6.03, 7.17, 8.19, 9.00, 9.40, 10.40, 11.40 மதியம் 1.40, 2.57 மாலை 4.15, 5.10, 6.26 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருமார்க்கமாக 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதிய நேர அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், இருமார்க்கங்களிலும் ஏற்கனவே 228 ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுவதால் 200 ரெயில்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *