சென்னை, ஆக. 22-
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணி 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரை -– எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் கடற்கரை -– எழும்பூர் இடையே செல்லும் போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையில் 4-வது வழித்தடம் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை – -எழும்பூர் இடையே 4.50 கி.மீ தொலைவுக்கு ரூ,279 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் தொடங்கியது. அந்த பணிகளை கடந்த மார்ச் மாதம் முடிக்க ரெயில்வே திட்டமிட்டிருந்தது. அதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடந்தது வந்தது.
இந்த நிலையில், எழும்பூர்- கடற்கரை 4-வது வழித்தடம் அமைக்கும் வழித்தடத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 110 மீட்டர் நீளத்தை கையகப்படுத்தும் பணியால் காலதாமதம் ஏற்பட்டது. இதற்காக கடற்படையிடம் நிலம் கோரி முன்மொழியப்பட்டு, கடந்த பிப்ரவரி 29-ம் தேதி ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், நிலம் கையகப்படுத்திய நிலையில், அங்கு வேலை தொடங்குவதற்கான எழுத்துப்பூர்வமான அனுமதி இதுவரையில் கடற்படை ரெயில்வே நிர்வாகத்திற்கு வழங்கவில்லை. எனவே, அந்த பணிகளை முடிப்பதில் தொடர்ச்சியாக சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும், கடற்படைக்கு சொந்தமான இடத்தில் ரெயில்வே தண்டவாளம் வருவதால் கடற்படையினருக்கு பாதுகாப்பு இருக்காது என கடற்படை நிர்வாகம் சார்பில் கூறுவதாகவும், அதற்காக அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘எழும்பூர்- கடற்கரை இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டன. கடற்படைக்கு சொந்தமான 110 மீட்டர் நீளத்தில் உள்ள பணிகளை தவிர எஞ்சிய பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கடற்படை அனுமதி கடிதம் கொடுத்த ஒரு மாதத்தில் 4-வது வழித்தடம் அமைக்கும் பணி முடிவடைந்து சிந்தாதிரிப்பேட்டை -– கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும்.
எனவே, ரெயில்வே அமைச்சகம் இதுகுறித்து கடற்படை தலைமையகத்திடம் நேரடியாக பேசி வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அனைத்து பணிகளையும் முடித்து ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.