சிறுகதை

கடமை |ராஜா செல்லமுத்து

இன்னும் எவ்வளவு நாளைக்கு தாங்க, இந்த துன்பத்திலே நம்ம வாழப் போறோம். கட்டிக் கொடுக்க வேண்டிய பொண்ணு . வேலைக்கு போக வேண்டிய பையன். இருக்கிற வீடு சரியா இல்ல. சாப்பிட்ட சாப்பாடு சரியில்லை. இப்படியே நாம எவ்வளவு நாளைக்கு தான் வாழப் போறோம்? இதுக்கு ஒரு முடிவே இல்லையா? நீங்க சம்பாரிச்சுட்டு வர்ற கொஞ்சம் பணத்தை வச்சு, ஏதோ வாழ்க்கை சரியா அமையல.. எங்க நம்ம வாழ்க்கை இப்படித்தான் போகுமா? நாமும் நாலு பேரப் போல நல்லா இருக்க மாட்டோமா. கடவுள் நம்ம தலையில இப்படி எழுதி வைத்திருக்கிறான். யார் செஞ்ச தப்பு ஒன்னும் புரியல இன்று குழம்பினாள் மனைவி சாரதா.

‘‘இன்னுமா தெரியல சாரதா. நான் வேலை தான் பார்க்கிறேன். ஆனா எதுவும் சரியா அமைய மாட்டேங்குது. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல.. அப்படிங்கிற கதை தான் இருக்கு. நம்ம வாழ்க்கையில உண்மையா இருக்கேன். எந்த கெட்ட பழக்கம் என்கிட்ட இல்ல.. கடுமையாக உழைக்கிறேன். ஆனா, சொல்லிக் கொள்ளும்படி வருமானம் வரலையே. சேமித்து வைக்கிற அளவுக்கு நம்ம கையில காசு வரலையே. காசு இல்லையே. இதுதான் உண்மைக்கு கிடைத்த பரிசு. நான் என்ன பண்றது சாரதா ? இன்சுரன்ஸ் மட்டும்தான் நம் சேமிப்பு . அதுக்கு பல்லைக் கடிச்சுக்கிட்டு பெருந்தொகை கட்டிகிட்டு வாரேன். அதிலே லோன் கூட எடுக்கலாமாம். பார்ப்போம். கடவுள் விட்டபடியே வாழ்க்கை அமையட்டும் ’’என்று மனைவி சாரதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சுரேஷ் *

கவலைகளை சுமந்த அவரது மனது ரொம்பவே கஷ்டப்பட்டது. சில நாட்கள் மௌனமாகவே இருந்தார் . யாருடனும் சரியாக பேசுவதில்லை. குடும்ப வறுமை அவைனை வாட்டியது. பெண்ணின் திருமணம், பற்றாத வருமானம். குடும்பம் போகும் பரிதாப நிலையைக் கண்டு அவருக்கு வருத்தம் மேலிட்டது. என்ன செய்வதென்று அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எத்தனையோ பேர்களிடம் உதவி செய்யும்படி கேட்டார். ஆனால் பணம் வைத்திருப்பவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. சேமிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை . கையிருப்பு பணமும் ஏதுமில்லை . அவருக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

மறுநாள் ஒரு எல்ஐசி ஏஜென்ட் சந்தித்தார். தனக்கு ஒரு பாலிசி போடும்படி அவரிடம் கேட்டார். ஒரு கோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்தார். தவணைகளையும் கடன் உடன் வாங்கி உருண்டு பெறண்டு கட்டினார்..

சார் இந்த வயசுக்கு மேல நீங்க பெரிய பாலிசி எடுத்தது தப்பு. ஆனாலும் பிரிமியம் தொகையைச் சரியா கட்டுறீங்க என்று ஏஜென்ட் சொன்னார்.

கட்டிடுவேன் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் சுரேஷ்.

*

என்னங்க போன மாசம் கூட, நம்ம பொண்ணப் பொண்ணு பாத்துட்டு போனாங்க… அவங்க கேட்ட வரதட்சணையை நம்மால கொடுக்க முடியல… நல்ல இடம் நல்ல வேலை பாக்குற மாப்பிள்ளை.. நல்ல குடும்பம்….. நம்ம வறுமைதான் கட்டி கொடுக்க விடாம செய்துடுச்சு. பையனுக்கும் சரியா வேலை கிடைக்கல. இந்த நிலைமை ? யாரும் நம்மள நம்பிக் கடன் தர மாட்டாங்க. என்ன பண்ணலாம்னு ஒரே யோசனையா இருக்கு? இருந்த நகையும் வித்துட்டோம். குடியிருந்த வீட்டையும் வித்திட்டோம். இப்ப இருக்கிறது வாடகை வீடுதான். எப்படியும் பொண்ண கட்டி கொடுக்கணும்னா , பல லட்ச ரூபாய் வேணும். என்ன பண்றதுன்னு தெரியலையே? என்று சாரதா சொன்னாள்.

‘‘அதுக்கென்ன நல்லது நிச்சயமா நடக்கும். நாம நல்லா இருப்போம்’’என்று கணவன் சொன்ன வார்த்தையை சற்றும் எதிர்பார்க்காத சாரதா

என்ன நீங்க சொல்றீங்க? நாம நல்லா இருக்கணும்னு எப்படிச் சொல்றீங்க என்று சாரதா கேட்டாள்.

லேசாக சிரித்தவாறே…. ஆமா, நாம நல்லா இருப்போம் என்று சொன்னார் சுரேஷ்.

*

அன்று இரவு அலுவலகம் முடித்து அவர் வருவதற்கு ரொம்பவே காலதாமதமானது. வீட்டிலிருந்து அனைவரும் அவரைக் காணாது திகைத்தார்கள். அலுவலகத்திற்கு போன் செய்து கேட்க அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி விட்டதாக பதில் வந்தது .

எப்போதும் அலுவலகம் முடித்து வேகமாக வீட்டிற்கு வரும் சுரேஷ் அன்று வராதது குடும்பத்திற்கு பெரும் கவலையை அளித்தது.

நண்பர்கள் போகும் இடம் என்று அத்தனையும் விசாரித்துப் பார்த்தார்கள். ஆனால் அவர் அங்கெல்லாம் வரவில்லை என்று பதில் திரும்ப வந்தது.

செய்வதறியாது குடும்பமே வீட்டில் அமர்ந்திருக்க, அப்போது மகனின் தொலைபேசி அலறியது.

தொலைபேசியை எடுத்து காதில் வைத்த மகன் ஐயோ என்று கத்தினான். வீட்டில் இருப்பவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள்.

‘‘என்ன.? ’’ என்று கேட்க மகனால் பதில் சொல்ல முடியவில்லை. சைகையிலேயே ஏதோ சொன்னான்.

அப்புறம் தான் தெரிய வந்தது சுரேஷ் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று… குடும்பத்திற்கு இடி விழுந்தது போல் ஆகியது… விபத்து நடந்த இடத்திற்கு போய் சுரேஷ் தான் என்பதை உறுதி செய்தார்கள் குடும்பத்தார்கள்….

போஸ்ட் மார்டம் செய்த பிறகு உடலை கொடுத்தார்கள்….

காரியங்கள் முடிந்தன….. ஒன்றிரண்டு நாட்களில் இன்சூரன்ஸ் ஏஜென்ட் வந்தார்…… அவர் எடுத்த ஒரு கோடி ரூபாய்க்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார் …அதன்படியே ஒரு கோடி ரூபாயை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாங்கி வந்து கொடுத்தார்.

இப்போது சுரேஷின் ஆத்மா ஆனந்தம் அடைந்தது…. தான் இருந்தபோது செய்ய முடியாதைதை ஒரு விஷயத்தை இறந்த பிறகு செய்தோம்……. அதுவே தன் குடும்பத்திற்கு செய்த பெரிய பாக்கியம் என்று கருதியது சுரேஷ் ஆத்மா…….

இப்போது அந்த குடும்பத்தின் கண்ணீர் விலகியது.

ஆனால் சுரேஷ் இல்லாதது மட்டும் அந்த குடும்பத்திற்கு கவலை ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *