சிறுகதை

கடமையா? பாசமா? | அக்னி

லைப் கேர் மருத்துவமனையின் ஐசி யூனிட்டிற்கு வெளியே டாக்டருக்காக சிவகாமி காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு டாக்டர் வெளியில் வந்தார்.

டாக்டர்…. குழந்தை இப்போ எப்படி இருக்கா ….?

குழந்தையின் இதயதுடிப்பு இப்போ நார்மலுக்கு வந்துருச்சு. மூச்சுத் திணறலும் இப்போ இல்லை. இதயத்துல இருக்கிற 4 வால்வுல 1 வால்வோட ஃபன்க்‌ஷன் குறைஞ்சுட்டு வரதால இன்னைக்கு மாலைக்குள்ள ஆபரேஷன் பண்ணி அடைப்பை சரி செஞ்சாகணும். நீங்க உடனடியா கேஷ் கவுண்டர்ல ஆபரேஷனுக்கான பணத்தை கட்டிருங்க. குழந்தையோட அப்பா வரலையா?

மதியம் 2 மணிக்குள்ள வந்துருவாரு டாக்டர்?

சீக்கிரம் வரச் சொல்லுங்க. குழந்தையோட அப்பா கையெழுத்து போட்டாதான் ஆபரேஷன் பண்ண முடியும்.

டாக்டர் இப்போ குழந்தையை பார்க்கலாமா?

குழந்தையை டிஸ்டர்ப் பண்ணாமா பாருங்கம்மா. சிஸ்டர் இவங்கள உள்ள கூட்டிட்டு போங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிவகாமி ஐசி யூனிட்டுக்குள் நுழைந்தாள்.

ஒரு வாரத்திற்கு முன்பு வரை முயல் குட்டி போல் துள்ளி திரிந்து விளையாடிக்கொண்டிருந்த, 5 வயதே நிரம்பிய அனாமிகா தற்போது மருத்துவ உபகரணங்கள் உதவியில் ஐசி யூனிட்டில் உள்ள கட்டிலில் அமைதியாக படுத்திருந்தாள். சிவகாமியை பார்த்தவுடன்,

பாட்டி அப்பா வரலையா? எனக்கு அப்பாகிட்ட பேசனும் இப்போவே பேசனும் என்று கேட்டாள் தனது மழலை மொழியில்.

அப்பா இப்போ வந்துருவாரு கண்ணு. நான் அப்பாக்கு போன் பண்ணி தரேன். நீ பேசு என்று தனது போனில் இருந்து டயல் செய்தார்.

சில விநாடிகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் சைலேஷ் போனை அட்டண்ட் செய்தார்.

அப்பா எப்பப்பா நீ வருவ எனக்கு உன்ன இப்பவே பாக்கணும் சீக்கிரம் வாப்பா…

அனு பாப்பா உன்னை பார்க்கத்தான் அப்பா வந்துட்டு இருக்கேன் சீக்கிரமாவே வரேன் டா செல்லம்.

அப்பா…..

என்னடா தங்கம் சொல்லுமா

அப்பா நானும் அம்மா மாதிரியே சாமி கிட்ட போயிருவனா? நான் உன் கூடவே இருக்கேன் பா..

மகளின் இந்த வார்த்தைகளை கேட்டதும் சைலைஷின் கண்களில் நீர் நிரம்பியது.

சைலேஷ் மாலைக்குள்ள ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிருக்காரு. நீ சீக்கிரம் வாப்பா எனக்கு பயமா இருக்கு? என்றாள் சிவகாமி.

அம்மா நா இப்போ கிரைம் மீட்டிங்க்கு போயிட்டு இருக்கேன். 1 மணிக்கு மீட்டிங்க் முடிஞ்சிரும் 2 மணிக்குள்ள நா ஹாஸ்பிடலுக்கு வந்துருவேன் என்று கூறிவிட்டு செல் போனை அணைத்து தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு மீட்டிங்க் ஹாலிற்கு சென்றார் சைலேஷ்.

மதியம் 1 மணி எஸ்.பி அலுவலகத்திலிருந்து வெளியே வந்து தனது செல் போனை எடுத்து பார்த்தார் சைலேஷ்.10 மிஸ்டு கால்கள் இருந்தன எல்லாம் அம்மாவிடமிருந்து. உடனே அம்மாவிற்கு அழைத்தார்.

பாப்பாவுக்கு ஹார்ட் பீட் மறுபடியும் குறைய ஆரம்பிச்சிருச்சு. உடனே ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்றாரு நீ கொஞ்சம் சீக்கிரம் வாப்பா என்றார் சிவகாமி மிகவும் பதற்றத்துடன்.

அம்மா இப்போ தான் மீட்டிங்க் முடிஞ்சது நான் கிளம்பிட்டேன் . இன்னும் அரை மணி நேரத்துல ஹாஸ்பிட்டலில் இருப்பேன் என்று கூறி விட்டு தனது ஜீப்பில் ஏறினார்.

திவாகர் என்னை ஹாஸ்பிட்டலில் டிராப் பண்ணிட்டு நீ ஜீப்பை எடுத்துட்டு ஸ்டேஷனுக்கு போயிரு என்றார்.

ஓகே சார்.

ஜீப் ஹாஸ்பிடலை நோக்கி வேகமாக பயணித்தது. 10 நிமிடத்திற்கு பிறகு…..…

சார் எஸ்.ஐ இளங்கோ காலிங்,.பிவிகே பள்ளி மாணவர்கள் வந்த வேன் காந்திநகர் மேம்பாலத்துல விபத்தில் சிக்கியது .உடனடியா நீங்க ஸ்பாட்டுக்கு வாங்க சார் என்று வாக்கி டாக்கி மூலம் சைலேஷுக்கு அழைப்பு வந்தது.

திவாகர் காந்தி நகர் போங்க.

சார் இன்னைக்கு உங்க பொண்ணோட ஆபரேஷன்?

திவாகர் என் குழந்தைமாதிரி பல குழந்தைகள் இப்போ ஆபத்துல இருக்காங்க. அவங்கள முதலில் காப்பாத்தனும். சீக்கிரம் அங்க போங்க.

50 அடி உயர மேம்பாலத்தில் பள்ளி வேனின் 2 டயர் பாலத்திலும் 2 டயர் அந்தரத்திலும் இருந்தது. உள்ளே 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் இருந்தனர்.

இன்ஸ்பெக்டர் சைலேஷ் மற்றும் மீட்பு படையினர் 2 மணி நேரமாக போராடி எல்லா குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். சார்… சைலேஷின் பின்னால் ஒரு குரல்….

தன் கண்ணீரை துடைத்து விட்டு பின்னால் திரும்பி பார்த்தார் சைலேஷ்.

உங்களாள தான் சார் என் குழந்தை இன்னைக்கு உயிரோட இருக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் என்று கூறிவிட்டு கையெடுத்து குப்பிட்டார் ஒரு தாய். அந்த தாயின் கையில் இருந்த குழந்தைக்கும் அனாமிகாவின் வயது தான் இருக்கும்.

சைலேஷ் அந்த குழந்தையை பார்த்தார் .அவள் முகத்தில் அனாமிகா தான் தெரிந்தாள்.

அங்கிள் கொஞ்சம் கிட்ட வாங்க… என்றாள் அந்த குழந்தை

என்னடா??

அந்த குழந்தை சைலேஷைக் கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

அந்த நொடி, சைலேஷின் வார்த்தைகள் மௌனமானது. உதட்டில் சிறு புன்னகையுடன் கண்களில் கண்ணீர் வந்தது.

அனாமிகா கண்டிப்பா என்னை மன்னிப்பா என்று மனதில் நினைத்தபோது …..

சைலேஷ் ஜீப்பில் வைத்திருந்த போன் மணி அடித்தது. எடுத்தார். அம்மா அழைத்தார்.

நீ எங்கப்பா போயிட்ட சைலேஷ்.ஆபரேஷன் முடிஞ்சிருச்சு. பாப்பா பொழச்சிகிட்டா . கண்முழிச்சதும் ‘அப்பா எங்க’ னு தான் கேட்டா… என்றார் சிவகாமி .

சைலேஷ் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.

மகளைப் பார்க்க மருத்துவ மனைக்கு வேகமாகப் போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *