ரிசர்வ் வங்கி தகவல்
டெல்லி, ஏப். 28–
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தகவல்படி, கடந்த இரண்டு ஆண்டுகளை விட தமிழ்நாடு அரசு தற்போது ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு கடனை குறைத்து வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-23 நிதி ஆண்டில், முதல் 11 மாதங்களில் தமிழ்நாடு ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக ஆந்திரப் பிரதேசம் ரூ.51,860 கோடியும், மகாராஷ்டிரா ரூ.50 ஆயிரம் கோடியும் கடன் வாங்கி உள்ளன. 2020-21 நிதி ஆண்டில் ரூ.87,977 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு, 2021-22-ல் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்கியது.
இந்த இரண்டு நிதி ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில் தமிழ்நாடு வாங்கிய கடன் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள கடன் அளவுக்குக் கீழ்தான் தமிழ்நாடு கடன் பெற்றுள்ளது.
குஜராத் அதிக கடன்
அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வுக்குட்படுத்தும் போது, கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாட்டைப் போலவே உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களும் கடன் வாங்குவதை குறைத்துள்ளன. அதேநேரத்தில், ஆந்திரப் பிரதேசம், அரியாணா, குஜராத் ஆகியவை கடந்த 2021-22 நிதி ஆண்டில் வாங்கிய கடனைவிட 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் அதிக கடன் வாங்கி உள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்) மகாராஷ்டிரா ரூ.25 ஆயிரம் கோடியும், தமிழ்நாடு ரூ.24 ஆயிரம் கோடியும், ஆந்திரப் பிரதேசம் ரூ.20 ஆயிரம் கோடியும் கடன் வாங்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. உத்தரப் பிரதசேம் ரூ.18,500 கோடியும், ராஜஸ்தான் ரூ.15 ஆயிரம் கோடியும், பஞ்சாப் ரூ.12,700 கோடியும், மேற்கு வங்கமும் தெலங்கானாவும் ரூ.12,500 கோடியும் கடன் வாங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரியாணா ரூ.12 ஆயிரம் கோடியும், குஜராத் ரூ.11 ஆயிரம் கோடியும் கடன் வாங்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.