சிறுகதை

கடன் – ராஜா செல்லமுத்து

நிர்மலுக்குக் கடன் கொடுத்தவன் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை பேசுவான். ஆனால் எதற்கும் நிர்மல் செவி கொடுக்க மாட்டான். பணம் கொடுத்தவன் குய்யோ முய்யோ என்று கத்தினாலும் அதைப் பற்றி எல்லாம் செவி சாய்க்காமல் இருப்பான் நிர்மல்.

கடன் கொடுத்தவன் தன் நண்பர்கள், சொந்தங்கள் அத்தனை பேருக்கும் சொல்லியிருப்பான். ‘நிர்மல் ஏன் இப்படி செய்கிறான். அவனுக்கு ஏன் கடன் கொடுத்திங்க என்று தான் கேட்பார்கள். கஷ்டம்னு சொன்னார். அதுதான் கொடுத்தோம் என்று கடன் கொடுத்தவன் சொல்ல. அதெல்லாம் கிடையாது. பணம் கொடுத்தா வட்டி கிடைக்கும். இப்ப பாருங்க எப்படி ஆகிப் போச்சுன்னு அதுதான் படுங்க’ என்று நிர்மல் சாதகமாகப் பேசினார்கள்.

நிர்மல் எந்த வகையிலும் கடன் கொடுத்தவன் போனை எடுப்பதே இல்லை.

அவன் பிரச்சனை முடிந்து விட்டபடியால் கடன் கொடுத்தவன் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படி இருந்து விட்டான்.

காவல்நிலையத்தில் புகார் செய்யவோ… மற்றபடி நடவடிக்கை எடுக்கவோ கடன் கொடுத்தவன் முன்வரவில்லை. காரணம் அப்படி சென்றால் கடன் கொடுத்ததற்கு மேல் செலவாகும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் வேறு நடவடிக்கைக்கு அவர்கள் போகவில்லை.

ஒரு கட்டத்தில் அலுத்துப்போன கடன் கொடுத்தவர் இனிமேல் அவனிடம் கேட்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.

‘என்ன நிர்மல் பணம் கொடுக்கலயா?’ என்று ஒருவர் கேட்க….

ஆமா என்று தலையாட்டினார் ஒருவர்.

‘எங்களுக்கு கூட அந்த நிர்மல் பணம் கொடுக்கனும்’ என்று கடன் கொடுத்தவன் இன்னொருவனும் சொன்னான்.

‘என்ன இப்படி சொல்றீங்க?’ என்று கேட்க…. ‘ ஆமா அவன் யார் கிட்ட பணம் வாங்கினாலும் அதை திருப்பிக் கொடுக்கவே மாட்டான். எல்லார்கிட்டயும் ஒரு பொய், எல்லார்கிட்டயும் ஒரு காரணம் எல்லார்கிட்டயும் ஒரு அழுக, எல்லார்கிட்டயும் ஒரு பணிவு இப்படி பேசி தான் பணம் வாங்குவான். ஆனா பணம் வாங்கின யார்கிட்டயும் அவன் பணத்தை திருப்பி கொடுத்த சரித்திரமே இல்லை’ என்று நிர்மல் மேல் புகார் மேல் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

‘கொடுத்தது தப்பா?’ என்று பணம் கொடுத்தவர்கள் புலம்பினார்கள்.

‘ஒன்னு தெரியுமா உங்களுக்கு? பணம் வாங்குற வரைக்கும் அவன் நமக்கு போன் பண்ணிக்கிட்டு இருந்தான். பணம் கொடுத்ததுக்கப்புறம் இப்ப நாம அவனுக்கு போன் பண்றோம். இதுதான் விதி. அவன்கிட்ட இருந்து சல்லிக்காசு கூட வாங்க முடியாது. ஆனா பாருங்க. இப்ப வேறொரு பக்கம் பணம் வாங்கிக் கேட்டுக் கொண்டிருப்பான்’ என்று ஒருவர் சொல்ல…….

அதேபோல புது நபரிடம் புதுக்கதை புது அழுகை, புது கண்ணீர், என்று பொய் பேசி பணத்தை கேட்டுக்கொண்டிருந்தான்.

இது உண்மை என்று நம்பிய அவன் நிர்மலுக்கு பணத்தைக் கொடுத்தான். அவனின் நிஜமுகம் அவருக்கு தெரியாது போல. படும் வரை பணம் கொடுத்தவனுக்கு நிர்மல் ஒரு நிரபராதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *