செய்திகள் போஸ்டர் செய்தி

கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் கால அவகாசம்

Spread the love
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைப்பு
கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் கால அவகாசம்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை, மே 22

ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலுக்கு பிறகு 3வது முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்.

அப்போது இந்திய பொருளாதாரம் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி முதலில் சில வரிகள் தெரிவித்து விட்டு அதை மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய தனது அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கியமானது சந்தை நடவடிக்கைகளை முன்னேற்றுவது, வணிகத்துக்கு உதவி செய்வது, நிதித்துறை நெருக்கடிகளை குறைப்பது, மாநில அரசுகள் சந்தித்து வரும் நிதி பற்றாக்குறையை சீர் செய்வது ஆகியவை குறித்து தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி சில உதவிகளை செய்வதாக அப்போது அவர் அறிவித்தார்.

அதில் முக்கியமானதாக, இன்னும் 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி ஏற்கனவே 3 மாத காலம் சலுகை அளித்திருந்தது.

ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இந்த சலுகை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள், கடன் தவணையை திரும்ப செலுத்த கோரி நெருக்கடி தரக்கூடாது.

ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.இதன்மூலம் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன்கள் மீதான வட்டியை வங்கிகள் குறைத்துக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

சிறு தொழில்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் கடன் வசதி அளிக்கப்படும். குறு நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்த கூடிய கால சலுகை மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படும்.

இந்தியாவிடம் 487 பில்லியன் டாலர் அன்னிய செலவாணி கையிருப்பு உள்ளது. கடந்த சில மாதங்களாக அன்னிய செலவாணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *