செய்திகள் நாடும் நடப்பும்

கடன் தரும் வங்கிகளை ஏமாற்றலாமா?


ஆர்.முத்துக்குமார்


––––––––––––––––––––––––––

கையில் காசு ஏதுமில்லை என்றால் கடன் தருவோரை தேடுவது வாடிக்கை! அப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் பல்வேறு கூச்சல் குழப்பங்களுக்கு இடையே ஒரு எம்.பி.யின் கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக ஒரு பதிலைக் கூறியிருந்தார். கேட்கப்பட்ட கேள்வியோ, இப்படி மத்திய அரசின் கடன் திட்டங்களில் வங்கிக் கடன் பெறுபவர் திருப்பித் தருவதில் தாமதம் ஏற்பட்டால் அவரைக் கேவலமாக திட்டி அவமதித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனே தந்த பதில், கடன் வாங்கியவரை ஏளனமாகவோ, கண்டிப்புக்காக காட்டமாகவோ பேசக்கூடாது என்று வங்கியாளர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

கடனை கொடுத்தவர் இப்படி கண்டிப்புடன் கேட்காமல் இருந்தால் வாங்கியவர் திருப்பித் தருவதில் வேகம் காட்டமாட்டார் என்பதையும் பார்க்கும்போது இது யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற தலைவலிக்குத் தீர்வு கிடையாது.

ஆனால் வசதி உள்ளவர் பல லட்சங்களை கடன் வாங்கிக்கொண்டு திரும்பத் தர முடியாமல் திணறுபவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் செயல் திட்டங்கள் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.

கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடி செய்தவர்களுடன் வங்கிகள் சமரசத் தீர்வு மேற்கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. மேற்படி நபர்களின் கடன்களில் ஒரு பகுதி அளவிலான தொகையைப் பெற்றுக் கொண்டு மீதமுள்ள நிலுவைத் தொகையை இழப்பாக கருதிக் கொள்ளலாம் என்பதே ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள சமரசத் தீர்வின் அடிப்படை.

வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனும் வசதியும் இருந்தும் வேண்டும் என்றே கடன் நிலுவையை செலுத்தாதவர்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் என்று ரிசர்வ் வங்கி வரையறை செய்துள்ளது. வங்கிகளில் வாங்கிய கடன்களை அது வாங்கப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துவது கடனுக்கு பிணையமாக வழங்கப்பட்ட சொத்துக்களை வங்கிகளுக்கு தெரியாமல் விற்பனை செய்தல் போன்ற காரணங்களால் வேண்டுமென்றே கடன்களை திருப்பிச் செலுத்தாத நிலை ஏற்படுகிறது.

ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட டிரான்ஸ் யூனியன் சிபில் என்ற கடன் விவரங்களை வெளியிடும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடன்களை வேண்டும் என்றே திருப்பி செலுத்தாதவர்களிடம் இருந்து வரவேண்டிய கடன் நிலுவைத் தொகை ரூ.2,45,767 கோடி ஆகும். 2022ம் ஆண்டு டிசம்பரில் அது ரூ.3,46,449 கோடியாக அதிகரித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த சமரசத் தீர்வுக்கு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக இதுதொடர்பான சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவையும் நேரத்தில் கணக்கில்கொள்ள வேண்டும். வங்கி நிர்வாகத்தின் கொள்கையோடு சமரசத் தீர்வ பேச்சு வார்த்தைகள் ஒத்துப் போக வேண்டும். மேலும் அவ்வப்போது ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். நடைமுறை விதிகளில் உள்ளபடி கடனாளிகள் மீதான சட்டபூர்வ நடவடிக்கைகள் தொடர வேண்டும். வங்கிகளுடன் சமரச தீர்வு கண்டவர்களுக்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் கழித்து தான் புதிய கடன்கள் வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது.

கடன் தள்ளுபடிகளில் பாரபட்சம் காட்டப்படும் நிலை இன்று வரை நீடித்து வருகிறது. நூறு கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் பெயர்களைக்கூட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒரு சில வங்கிகளை தவிர பிற வங்கிகள் வெளியிடுவதற்கு தயங்குகின்றன. ஆனால் வீட்டுக்கடன், வாகனக் கடன், சிறு தொழில் கடன் என்று ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான கடன்களைப் பெற்று தவணையைச் செலுத்தத் தவறியவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடும் நடைமுறையை வங்கிகள் எந்தவித தயக்கமும் இன்றி செயல்படுத்துகின்றன.

இந்த சமரசத் தீர்வு ஒரு வகையில் வங்கி சேவைகளுக்கு நல்ல செய்தி தான். சிறு கடன் வாங்கியவர்களில் ஆயிரத்தில் ஒருவர் கடனை திருப்பி தராமல் தடுமாறுவார்.

பல லட்சங்கள் கடன் வாங்குவோரில் ஒருவர் இப்படி கடனை திருப்பித் தராமல் வெளிநாடுகளுக்கு சென்று தஞ்சம் பெற்று விட்டால் கடன் தந்த வங்கி திவாலாகி விடலாம்.

அந்த அச்சத்தை நீக்கத்தான் ரிசர்வ் வங்கி சமரசத் திட்டத்தை வகுத்து வரும். வரட்டும், வங்கிச்சேவை சாமானியனுக்கு உதவட்டும் என்ற பரந்த நோக்கில் எடுக்கப்பட்டு இருக்கும் முடிவு என்றே தெரிகிறது.

கடன் வாங்குபவர் அதைப் பெற்ற பிறகு அதைக் கொண்டு வளர்ந்து உயரும் போது நன்றி மறவாமல் வட்டியுடன் பெற்ற கடனை திருப்பி தரும்போது ஏற்படும் ஆனந்தத்தை ஊரறிய தெரிவித்தால் பலர் அதை உணர்ந்து இதுதான் சரியான பாதை என அவர் வழியே பயணிப்பார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *