டெல்லி, டிச. 16–
கடந்த 5 ஆண்டுகளில் 19 நாடுகளின் 177 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இந்திய விண்வெளித்துறை மேம்பாடு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளித்துறை இணையமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.
அதன்படி, ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, கொலம்பியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், லித்துவேனியா, லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, கொரியா, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளின் செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏவியுள்ளது.
ரூ.1100 கோடி வருவாய்
இந்த காலக்கட்டத்தில் 177 வெளிநாட்டு செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-எம்கே3 செலுத்து வாகனம் மூலம் வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இந்த 177 வெளிநாட்டு செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டதன் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்திய ரூபாயின் படி இதன் மதிப்பு ரூ.1,100 கோடி ஆகும்.
விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு உருவாக்கப்பட்ட இன்-ஸ்பேஸ் டிஜிட்டல் தளம் வாயிலாக 111 விண்வெளி – ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. விண்வெளி நடவடிக்கைகளை வலுப்படுத்தி அதனை மேம்படச் செய்வதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.