இ–-மெயில் அனுப்பிய மர்ம நபருக்கு வலைவீச்சு
சென்னை, ஜூன் 18–-
சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 2 வாரங்களில் 5-வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் அனுப்பிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தடேி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இ-–மெயிலுக்கு ஒரு தகவல் வந்தது. அதில், “சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடிக்கும்” என கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி விமான நிலைய ஆணையக இயக்குனர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில் உயர் மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய போலீசார், விமான நிறுவன பாதுகாப்பு படை, ஆணையக பாதுகாப்பு அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த சில தினங்களாக விமான நிலையத்துக்கு தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 5-வது முறையாக மீண்டும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஏற்கனவே வந்த மிரட்டல் காரணமாக விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என தெரியவந்தது. எனினும் மிரட்டல் வந்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமானத்தில் செல்ல வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி அவர்களது உடைமைகளை கூடுதலாக ஒரு முறை பரிசோதித்து அனுப்பி வைத்தனர். விமான நிலைய கார் பார்க்கிங் பகுதிகளில் நீண்டநேரமாக நிறுத்தி வைக்கப்படும் கார்களை உடனே அப்புறப்படுத்தியதுடன், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் அனுப்ப கொண்டுவரும் பார்சல்களையும் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்தனர். விமான நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இ-மெயில் முகவரி போலியானது என்பதும் தெரியவந்தது. மேலும் மர்ம ஆசாமி பேசிய தொலைபேசி எணகளையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது. ஒரே ஆசாமிதான் சென்னை விமான நிலையத்துக்கு தொடர்ந்து 5-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.