அமெரிக்க அதிபர் பிடன் அறிவிப்பு
ஒப்பந்தத்தை மீறினால் தாக்குதல் – நெதன்யாகு எச்சரிக்கை
ஜெருசலேம், நவ. 27–
கடந்த 14 மாதங்களாக இஸ்ரேல் – லெபனான் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் வாக்கி டாக்கி, பேஜர் உள்ளிட்டவற்றை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனி, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டனர். போரில் இதுவரை பல ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் – லெபனான் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது.
இதுதொடர்பாக ஜோ பிடன் தனது எக்ஸ் வலைதளத்தில், இன்று மத்திய கிழக்கில் இருந்து எனக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நான் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்களுடன் பேசினேன். மேலும் இந்த செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகை தொலைக்காட்சி உரையில் பேசுகையில்,
“இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி, லெபனான் – இஸ்ரேல் எல்லையில் போர் இன்று அதிகாலை 4 மணி முதல் முடிவுக்கு வருகிறது. போர்நிறுத்தம் நடைமுறைக்கு வரும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும்.
போரை முடிவுக்குக் கொண்டுவர லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் எடுத்த துணிச்சலான முடிவை நான் பாராட்டுகிறேன். இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லையில் அமெரிக்க ஆயுதக்குழுக்கள் இருக்கமாட்டார்கள்.
ஆனால், நாங்கள் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து தேவையான உதவிகளை வழங்குவோம்” என்றார்.
நெதன்யாகு எச்சரிக்கை
ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம். ராக்கெட்டை ஏவினாலும், சுரங்கம் தோண்டினாலும் இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து பிரதமர்
போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வரும் நிலையில், இன்று உறுதி செய்யப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம், லெபனான் மற்றும் வடக்கு இஸ்ரேலின் குடிமக்களுக்கு நிம்மதியை அளிக்கும். அவர்கள் கடந்த சில மாதங்களாக போர் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.
இப்போது, இந்த ஒப்பந்தம் லெபனானில் ஒரு நீடித்த அரசியல் தீர்வாக மாற்றப்பட வேண்டும், இது பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701–ன் அடிப்படையில், குடிமக்கள் தங்கள் வீடுகளுக்கு நிரந்தரமாக திரும்பவும், எல்லையின் இருபுறமும் உள்ள சமூகங்கள் மீண்டும் கட்டமைக்கவும் அனுமதிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.