சென்னை, ஜூலை 25–-
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்திருப்பதாகவும், வரி வருவாய் 300 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் சார்பில், ‘165–-வது வருமான வரித்துறை தினம்’ நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற 165-–வது வருமான வரித்துறை தின நிகழ்ச்சிக்கு, வருமான வரித்துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் முதன்மை தலைமை கமிஷனர் சுனில் மாத்தூர் தலைமை வகித்தார். வருமான வரித்துறை இயக்குனர் (புலனாய்வு) முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், கவர்னர் ஆர் என் ரவி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் வருமான வரி செலுத்துவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கும், வருமான வரித்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் கவர்னர் ரவி விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
நிகழச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:–-
வருமான வரி என்பது நாட்டிற்கு அவசியமானது. நாட்டின் பல்வேறு அரசு துறைகள் வேகமாக இயங்குவதற்கு இது ஓர் எரிபொருளாக உள்ளது. வருமான வரி நாட்டை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல், வருமான வரி வருவாயும் 300 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. இதற்கு, வருமான வரித்துறையின் நிர்வாக செயல் திறனும், வருமான வரி செலுத்துவதில் ஏற்படுத்தப்பட்ட எளிமையாக்குதலும்தான் முக்கிய காரணம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே வருமான வரி விதிப்பு முறை அமலில் இருந்தாலும், அன்றைய காலங்களில் வருமான வரி செலுத்துபவர்களை ஆங்கிலேயர்கள் சந்தேக கண்ணோட்டத்துடன்தான் அணுகுவர். இதே அணுகுமுறை நாட்டில் சுதந்திரம் அடைந்த பிறகும் நீடித்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அந்த அணுகுமுறை முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது. இதனால், வருமான வரி செலுத்துபவர்கள், தயக்கங்கள் ஏதும் இன்றி வரி செலுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி கண்டுள்ளது.
சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா உலகின் 6–-வது பெரிய பொருளாதாரமிக்க நாடாக திகழ்ந்தது. ஆனால், 2014-–ம் ஆண்டுக்கு முன்பு, 11–-வது இடத்துக்கு பினனோக்கி சென்றது. அந்த நிலை தற்போது மாறி, இந்தியா உலக பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக வளர்ச்சி கண்டுள்ளது. விரைவில், உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக இந்தியா திகழும்.
இவ்வாறு அவர் பேசினார்.