முத்துவின் காதல் முன் கதவு வழியாக வந்து பின் கதவு வழியாகச் சென்று விட்டது.
ஆனால் நினைவுகள் மட்டும் நிலையாய் நின்று கொண்டிருக்கிறது .
பெயர் சொல்ல முடியாத அந்தப் பேரழகியை ஒரு சந்தர்ப்பத்தில் முத்து சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தவர்கள் அன்று மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள்.
முத்துவின் நினைவுகள் நீண்டன…..
எங்கள் இருவரின் பார்வையும் நிலைகுத்தி நின்றதே தவிர ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு மனம் வரவில்லை.
மௌனமே சாட்சியாக நின்றாேம்.
அவளுக்காக கவிதை எழுதி…. அவளுக்காக பேசிப் பேசி…. அவளுக்காக உருகி உருகி…. அவளுக்காக என்று எல்லாமே அவளுக்காக இருந்த என் கவிதைகள் இன்று கண்மூடி கிடக்கின்றன….
…இப்போதெல்லாம் நான் கவிதைகள் எழுதுவது இல்லை….
அன்று அவளைச் சந்தித்த பிறகு அலைகடலென வார்த்தைகள் பிரவாகம் எடுத்து வந்து விழுந்தன. என்னவளாய் இருந்தவள் இன்று வேறொருவரின் மனைவியாக இருந்தாள்.
இருவரும் பேசிக் கொள்ளவில்லை .ஆனால் என் மௌனத்தை மொழிபெயர்த்து கவிதையாய் எழுத ஆரம்பித்தேன்.
இரவு நீண்டது. கவிதையும் வளர்ந்தது.
பட்டாம்பூச்சியாய் எனக்குள் சிறகடித்துப் பறந்தவள்…. இன்று இந்த முத்துவின் முன்னால் கையெடுத்து வணங்கும் ஒரு சிலையாக இருக்கிறாய்…
ஆயிரம் இறக்கைகளை தந்தவள் இன்று அலைகடலின் அமைதியை தருகிறாள்.
தொடும் தூரத்தில் இருந்தவள், இன்று அருகில் இருந்தும் தொட முடியாத தூரத்தில்…..
செல்வியாய்ப் பார்த்தவளை இன்று திருமதியாய் பார்க்கிறேன் .
முத்தப் …..
பூவாய் சிணுங்கியவள்…. உள்ளங்கையில் பாதரசமாய் உருண்டு கொண்டிருக்கிறாள்…
சந்தித்தபோதெல்லாம் சிந்திய புன்னகை …. அன்று சிந்திய புன்னகையை நினைவுபடுத்துகிறது….
நாங்கள் இணைந்து இருந்திருந்தால் ஒரே சாலையில் பயணப்பட்டு இருக்கலாம்….
இன்று உனக்கொரு வாழ்க்கை….. எனக்கொரு வாழ்க்கை….
உன் இரவின் நீளம் என்னவென்று எனக்குத் தெரியாது….. என் இரவின் நீளம் என்னவென்று உனக்கும் புரியாது…..
ஆனால் இரவுப் பொழுதுகளை இருவரும் கடந்து தான் வருகிறோம்…….
இதயத்தில் உதித்த இதயக்கமலம் மட்டும் இன்றும் அப்படியே இருக்கிறது….. இப்போதெல்லாம் உன்னை பார்க்கும்போது கையெடுத்து வணங்கத்தான் தோன்றுகிறது……
என்னவளாக இருந்தவள் இன்று இன்னொருவரின் அவள்……
கடந்த வாரம் கூட உன் பிறந்த நாள் ….. உன் சிரிப்பை சேமித்த எனக்கு இன்று உன் வாழ்த்துக்களைத் தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன்….
இது யாருக்கும் தெரியாத விஷயம் அல்ல…
தெரிந்த விஷயம் தான் ….
ஆனால் காலம் எனும் நதியில் நீயும் கடல் சேர்கிறாய் …நானும் கடல் சேர்கிறேன்…. ஆனால் வேறு வேறு பாதைகளில் …..சேருமிடம் ஒன்றாக தான் இருக்கிறது தோழியே….
இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில் இணையாமல் போன தண்டவாளமாய் நாம் இருந்தாலும் வாழ்க்கை என்ற ஒரே ரயில் நம் மீது ஓடிக் கொண்டுதான் இருக்கிறது…..
காலம் விசித்திரமானது…..கண்ணீரையும் வரவழைக்கும் …. புன்னகையும் கொண்டுவரும்……
நாம் நம் கண்ணீரையும் புன்னகையையும் கடந்து தான் வந்திருக்கிறோம்….
வாழும் காலம் வரை உயர்ந்த அன்பில் ….உயர்ந்த பண்பில்…. ஒருவருக்கொருவர் வாழ்வோம்….
முன்பு பூக்களை பரிசளித்தேன்….. இனிப் புன்னகையைப் பரிசளிப்பேன்…
முன்பு அருகில் அமர்ந்து உரையாடுவேன்….
இன்று தூரத்திலிருந்து உனைக் கைகூப்புகிறேன்….
இந்த பூமி உள்ளவரை நம் நட்பு உயர்ந்ததாகவே இருக்கும் …..இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் …….
சந்திக்கும்போதெல்லாம் நலம் விசாரிப்போம் …..அது நல்லதாக இருக்கட்டும் …..
நலத்தோடு நீ வாழ வேண்டும்….. பிரார்த்திக்கிறேன்….
என்றும் மாறாத அன்புடன்
என்று கவிதையில் குழைத்த காதல் கடிதம் எழுதிய போது,
நண்பன் ஆனந்த் வந்தான் .
என்ன முத்து, காதலி கழுத்தில மாலை போட வேண்டிய நீ கவிதை மாலை போட்டுட்டு இருக்கே.
உன்காதல் வாழ்க்கை சாத்தியமில்லாமப் போச்சு என்று பெருமூச்சு விட்டான் ஆனந்தன்.
அவனின் பெருமூச்சுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் சிறு புன்னகையை மட்டும் சிந்தினான் முத்து
சரி இந்த கண்ணியமான வாழ்க்கையை எப்போதும் நீ கடைப்பிடிக்கணும். எல்லை மீறக் கூடாது .
நானும் பார்த்தேன். உன்னுடைய பிரபஞ்சப் பேரழகியை அடைய… நீ குடுத்து வச்சது அவ்வளவுதான் .
கடவுள் அமைத்து வைத்த மேடையில யார் யாருக்கு விவாகம்னு அவன் தான் முடிவு செய்கிறான்.
சரி இப்போதைக்கு அவளைப் பார்த்ததும்….
உனக்கு ஒரு கவிதை கிடைச்சிருக்கு. இதை எழுதி
வச்சுக்க…..
இந்தக் கவிதை உன்னாேட நெஞ்சுல கல்வெட்டா இருக்கும் என்று சொல்லி காெண்டே அந்த கவிதையை ஒரு முறைக்கு பலமுறை வாசித்தான் நண்பன் ஆனந்தன்
இந்தக் கவிதை எனக்கும் பயன்படலாம்.
இப்ப எல்லாம் உயிருக்கு உயிரா காதலிக்கிறவங்க கூட ஒண்ணு சேர்றது இல்ல . ஒருவேளை என்னுடைய லவ்வரும் என்னைய விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிட்டா இந்தக் கவிதை எனக்கும் உதவும் இல்லையா? என்று அந்தக் கவிதையின் நகலெடுத்துக்கொண்டு கிளம்பினான் ஆனந்தன்.
ஆனால் முத்துவின் மனதிற்குள்…..
அந்தக் கவிதை அசலாக அமர்ந்து கொண்டது.